Published : 19 Dec 2022 04:59 PM
Last Updated : 19 Dec 2022 04:59 PM

பரந்தூரில் போலீஸ் குவிக்கப்பட்டு இருப்பது அரச பயங்கரவாதத்தின் அடையாளம்: சீமான் சாடல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்ற பரந்தூர் கிராம மக்கள்

சென்னை: "அழிவுத் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச பயங்கரவாதத்தின் அடையாளமாகும்.

மக்களின் தொடர் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்தி நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதே எதேச்சதிகாரத்தினைக் காட்டும் நிலையில், அதனை எதிர்த்து மக்களாட்சி உரிமைக் கொண்டுப் போராடுபவர்களை அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும். அழிவுத் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பதுபோல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?

எனவே, உடனடியாக காவல் துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

அதேவேளையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் இன்று (டிச.19) பேரணியில் ஈடுபட்டனர். இதன்படி 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து பேரணியாக வந்தவர்களை தடுத்தி நிறுத்தி அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x