Last Updated : 19 Dec, 2022 04:08 PM

1  

Published : 19 Dec 2022 04:08 PM
Last Updated : 19 Dec 2022 04:08 PM

மாநில அந்தஸ்து விவகாரம் | முதல்வர் ரங்கசாமியின் மன உளைச்சலைப் போக்குவேன்: தமிழிசை

ஆளுநர் தமிழிசை | கோப்புப் படம்

புதுச்சேரி: “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் மன உளைச்சலைக் கேட்டு, அப்பிரச்சினையை தீர்க்கும் திறமை எனக்குண்டு, இங்கு இருப்பது அண்ணன் - தங்கைக்குள் வரும் பிரச்சினைதான். மாநில அந்தஸ்து தேவை என முதல்வர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "யார் விமர்சனம் வைத்தாலும், மக்கள் கோப்புகளை நான் புறம்தள்ளுவது கிடையாது. நான் ஆளுநராக வந்தபோது கிடப்பில் போடப்பட்டிருந்த பல கோப்புகளுக்கு ஒப்புதல் தந்துள்ளேன். புதுச்சேரி முந்தைய காலக்கட்டத்தை விட முன்னேறி வருகிறது. முதல்வர் சிரமத்தை சொல்லிவிட்டார். நாளை அதிகாரிகளையும், முதல்வரையும் அழைத்து அமர்ந்து பேசி காலதாமதத்தை சரி செய்து விடுவோம்.

ஒரு சகோதரர், சகோதரிக்குள் வரும் பிரச்சினைதான். இது மக்களை பாதுகாக்கும் விஷயம் ஏதும் நடக்கவில்லை. கோப்பினை மக்கள் முகமாகதான் பார்க்கிறேன். பொங்கல் உதவிப்பொருள் தொடர்பான கோப்புகள் வந்துள்ளன. மக்கள் பாதிப்பு ஏற்பட்டால் முடியாது என்று தடுத்துள்ளோம். மக்கள் பாதிக்கும் வகையில் ஏதும் நடக்கவில்லை. புதுச்சேரி நன்றாக இருக்கிறது” என்றார்.

மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சலில் இருப்பதாக முதல்வர் கூறுகிறாரே என்று கேட்டதற்கு, "மாநில அந்தஸ்துக்கு நான் பதில் சொல்லவில்லை. மாநில அந்தஸ்தை கேட்பவர்கள் முதலில் இங்கு ஆட்சியில் இருந்தவர்கள்தான்.

முதல்வர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். மாநில அந்தஸ்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அது தற்போதும் நடக்கிறது. யாரும் மன உளைச்சலில் இருக்கக் கூடாது என்பதுதான் எனது கொள்கையே. அது சாமானியராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும் அது பொருந்தும். முதல்வரின் மனஉளைச்சலை கேட்டு, அதில் பிரச்சினையை தீர்த்து வைக்கும் மனநிலையும் திறமையும் எனக்கு உண்டு. இங்கு அண்ணன் - தங்கைக்குள் வரும் பிரச்சினைதான். எல்லாம் சரியாக நடக்கிறது.

மற்ற ஆளுநர் போல் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. மக்களுக்கு வேண்டியதை தான் செய்கிறேன். யூனியன் பிரதேசத்தில் உள்துறையில்தான் சில முடிவுகளை கேட்க முடியும். வரைமுறையால் மக்கள் பாதிப்பை ஏற்பதில்லை. விரைவாக முடிவு எடுக்க உள்துறையில் இருந்து அதிகாரிகள் மூன்று மாதங்கள் ஒருமுறை புதுச்சேரி வருகிறார்கள். மத்திய அரசு நமக்கு துணைபுரிகிறது. நல்லது தான் நடக்கிறது. அந்த மாடல், இந்த மாடல் என்று கூறவில்லை. நல்ல ஆட்சி என்று தமிழில் கூறுகிறேன்" என்று குறிப்பிட்டார்.

மாநில அந்தஸ்தை மத்திய அரசிடம் வலியுறுத்துவீர்களா என கேட்டதற்கு, "பல வழிமுறை இருக்கு. மாநில அந்தஸ்து கிடைத்து நல்லது நடப்பதுதான் தற்போதும் நடக்கிறது" என்று குறிப்பிட்டார்.

மக்களுக்கு பாதிக்கும் எதையும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு மதுபானத் தொழிற்சாலைகள் அனுமதி தரப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “மக்களை பாதிக்கும் ஏதும் நடைமுறைப்படுத்தப்படாது. அக்கோப்பு வரவில்லை. இதுபற்றி விசாரிக்கிறேன். கோப்புகள் காலதாமதம் தொடர்பாக அதிகாரிகளை அழைத்து பேசுவேன்" என்று தமிழிசை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x