Published : 19 Dec 2022 03:46 PM
Last Updated : 19 Dec 2022 03:46 PM

சென்னை வடபழனி கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டண முறைகேடு: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அதிர்ச்சி

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் வசூலிப்பதில் நடக்கும் முறைகேடுகளால் அதிர்ச்சியடைந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

வடபழனி கோயிலில் நடந்தது என்ன? - கடந்த சனிக்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வடபழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். தனது நீதிபதி அந்தஸ்தை பயன்படுத்தி விஐபி தரிசனம் செய்ய விரும்பாத நீதிபதி, சாதாரண மக்களைப் போல ரூ.50 மதிப்புள்ள சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். இதற்காக நீதிபதியிடம் ரூ.150-ஐ பெற்றுக்கொண்ட கோயில் பணியாாளர், அவருக்கு இரண்டு 50 ரூபாய்க்கான டிக்கெட்டையும், ஒரு 5 ரூபாய்க்கான டிக்கெட்டையம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கோயில் பணியாளரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பணியாளர், நீதிபதி என்று தெரியாமல் கடுமையாக நடந்துள்ளார். அந்தக் கோயிலில் பக்தர்கள் புகாரளிக்கும் வகையில், கோயில் செயல் அலுவலரின் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை அடங்கிய விளம்பர பலகைகள் இல்லாததைக் கண்டு நீதிபதி மேலும் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது நீதிபதியின் மனைவி, தமிழக முதல்வரே கூட தனது தொலைப்பேசி எண்ணை பொதுமக்களுக்கு வழங்க தயங்காத நிலையில் ,கோயிலின் செயல் அலுவலர் எண்ணை கொடுக்க மறுப்பது ஏன் என்று கோயில் பணியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த பணியாளர், முதல்வர் வேண்டும் என்றால், கொடுக்கலாம். நான் தர மாட்டேன் என்று கூறியுள்ளார். பல கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளைக் கொண்ட ஆண்டுக்கு ரூ.14 கோடி வருவாய் கொண்ட இந்தக் கோயிலிலேயே இதுபோன்ற சூழல் நிலவினால், தமிழகத்தில் உள்ள மற்ற கோயில்களின் நிலை என்னவாக இருக்கும் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

தாமாக முன்வந்து வழக்கு: மேலும், இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உள்ளதாகவும், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் இந்த முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்படி திங்கள்கிழமை இந்த விவகாரம் குறித்து, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது வடபழனி முருகன் கோயில் செயல் அலுவலர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.முத்துகுமாருடன் ஆஜராகியிருந்தார். அப்போது நீதிபதி, "இதுபோன்ற பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ளவர்களை செயல் அலுவலர்களாக இந்துசமய அறநிலையத் துறை நியமிக்க வேண்டும். இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு கோயிலின் செயல் அலுவலருக்கு சமஅளவு பங்கு உள்ளது. எனவே, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை எடுக்க வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட பணியாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சார்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, விஐபி சலுகையை பயன்படுத்தாமல் செல்லும்போதுதான், அரசு ஊழியர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள முடிகிறது என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பான அறிக்கை வரும் ஜனவரி இரண்டாவது வாரம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x