Published : 19 Dec 2022 06:42 AM
Last Updated : 19 Dec 2022 06:42 AM
சென்னை: தமிழகத்தில் வரி வசூல் திருப்திகரமாக இருந்தாலும், புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்காதது வருத்தம் அளிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மத்திய வருவாய்க் குடியிருப்பு வளாகத்தில், வருமான வரித் துறை, மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார்.
சுமார் ரூ.560 கோடியில் நந்தவனம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்புகளுக்கு, குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்ற பூக்களின் பெயர்களான கொன்றை, காந்தள், காஞ்சி, வாகை, அனிச்சம், செண்பகம், அகில், மௌவல், தாமரை மற்றும் வேங்கை என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இதேபோல, பைம் பொழில் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள நுண் வனத்தையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியத் துறையான வருமான வரித் துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு நல்ல வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில், பசுமையான சூழலில் இந்தக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
இந்த விழாவில் எனக்கு வாகை மலர் அளிக்கப்பட்டது. ஒருவர் வாகை மலர் சூடி வந்தால், அவர் வெற்றி பெற்றுத் திரும்புவார் என்பார்கள். எனவே, வாகை மலரைத் தேடி கண்டறிந்து எனக்கு கொடுத்ததற்கு நன்றி.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென பிரதமர் மோடி உழைத்து வருகிறார். இந்தப் பணியில் நானும் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன்.
தமிழகத்தில் வரி வசூல் திருப்திகரமாக இருந்தாலும், புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்காதது வருத்தம் அளிக்கிறது. புதிதாக எத்தனை பேர் வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளார்கள் என்பதும் முக்கியம். வருவாயை அதிகரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுங்கள். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், வருமான வரித் துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் விவேக் ஜோரி, உறுப்பினர் வி.ரமா மேத்யூ, மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா, உறுப்பினர் சங்கீதா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...