Published : 19 Dec 2022 06:36 AM
Last Updated : 19 Dec 2022 06:36 AM

முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் `நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டம்: ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்

சென்னை: முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைக்கிறார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ‘முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை- 2022’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, அப்பள்ளியின் முன்னாள் மாணவரான முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகிலேயே பெரிய மகிழ்ச்சி, கடந்தகால இனிமையான நினைவுகள்தான். இந்த அளவுக்கு நான் உயர்ந்ததற்கு இந்தப் பள்ளியும் ஒரு காரணம். அதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

ஒவ்வொரு பள்ளிக்கும், அந்தப் பள்ளியில் படித்தவர்கள் உதவ வேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பை தமழக அரசு சார்பில் மேற்கொள்ள உள்ளோம். முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டத்தை திங்கள்கிழமை (இன்று) நான் தொடங்கி வைக்க உள்ளேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

மேலும், இதற்கான இணையதளத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் பால் வில்சன், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜே.மனோகர், கிறிஸ்தவக் கல்லூரி சங்கத் தலைவர் கே.எம்.மேமன், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் அருண் மேமன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகர் பி.டபிள்யு.சி.டேவிதார், முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் பி.ஜெயராமன், எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் டி.ஆர்.பி.ராஜா, பிரபாகர ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x