Published : 19 Dec 2022 07:31 AM
Last Updated : 19 Dec 2022 07:31 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடையான பேராவூரணி பகுதியில் 100 குளங்களை மீட்டு, சீரமைத்த விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நேற்று கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) சார்பில், கரிகாலச் சோழனின் நீர்மேலாண்மை செயலை போற்றும் விழா, கைஃபாவின் 100-வது குளம் சீரமைப்பு பணி நிறைவு விழா, குறுங்காடு தொடக்க விழா, சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா, குளம் சீரமைப்பு பணிக்கு பொருளுதவி வழங்கிய தொழிலதிபருக்கு அஞ்சல் தலை வெளியீட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.
கைஃபா செயலாளர் கோ.பிரபாகரன் வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன், கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வி.அன்புச்செல்வன், நீர்வள ஆதாரத் துறை காவிரி கீழ்வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வாழ்த்துரை வழங்கி பேசியது: ஒரு மன்னரின் முதல் கடமை நீர்மேலாண்மை என சங்கத் தமிழ் கூறுகிறது. திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என குறிப்பிட்டு, நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். கம்பன் தனது பாடல்களில் கடவுள் வாழ்த்துக்கு பிறகு, நீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடல்களை எழுதியுள்ளார். இதை நாம் மறந்துவிட்டு, தற்போது வேறு பாதையில் பயணிக்கிறோம்.
இயற்கையை நாம் தவறாக புரிந்து கொண்டோம். கண்ணுக்குத் தெரியும் இயற்கையை வணங்காமல் அழித்து வருகிறோம். இயற்கையும், கடவுளும் ஒன்றுதான் என்பதை நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தனர். குளங்களை சீரமைத்தவர்களை பாராட்டுவதுடன், நாமும் அந்த செயலில் ஈடுபட வேண்டும். கைஃபா அமைப்பு 1,000 குளங்களை இந்த பகுதியில் சீரமைக்க முன்வர வேண்டும் என்றார்.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் பேசியது: யாரையும் நம்பி இருக்காமல் இந்த பகுதியில் உள்ளவர்கள் தாமே முன்வந்து நீர்நிலைகளை சீரமைக்கத் தொடங்கினர். முதலில் பேராவூரணியில் தொடங்கிய குளம் சீரமைப்பு என்பது கடந்த 3 ஆண்டுகளில் பெரிய இயக்கமாக விரிவடைந்து, தற்போது 100 குளங்களை சீரமைத்துள்ளது என்பது பெருமைக்குரியது என தெரிவித்தார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான வி.பாரதிதாசன் பேசும்போது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நீர்மேலாண்மைக்கு வித்திட்ட பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸை மறந்து விட்டனர். அவர் இல்லையென்றால் கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் கிடைத்திருக்காது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், நீர்நிலைகளை அழிவின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்" என்றார்.
பின்னர், கைஃபா நிர்வாகிகளுக்கு நீதிபதிகள் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கைஃபா தலைவர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக, 7 இடங்களில் குறுங்காடு அமைக்கும் பணியை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment