Published : 19 Dec 2022 06:42 AM
Last Updated : 19 Dec 2022 06:42 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கரோனா தொற்றால் இரு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சுற்றுலா மையங்கள் அனைத்தும் களைகட்டியுள்ளன.
சபரிமலை செல்லும் வழியில் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுவதற்கு வருகின்றனர். வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கும் மேல் கன்னியாகுமரி வருவதால் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், பகவதியம்மன் கோயில், கடற்கரை சாலை, காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் சூரிய உதயம் பார்க்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடுகின்றனர். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகுகளில் சென்று பார்வையிட பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
நவ.17-ல் சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.
இதன்மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கன்னியாகுமரிக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். வடமாநிலங்கள், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT