Published : 18 Dec 2022 09:10 AM
Last Updated : 18 Dec 2022 09:10 AM
விழுப்புரம்: திண்டிவனத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: 2ஜி வழக்கை வைத்து பல அரசியல் கட்சிகள் நம்மை விமர் சனம் செய்தார்கள். ஆனால் தற்போது நீதிமன்றம் 2ஜி வழக்கே பொய் என தீர்ப்பளித்துள்ளது. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங் களில் ஆளுநரை நியமித்து, அங்கு ஆர்எஸ்எஸ் பணிகளை செய்து வருகிறார்கள். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
சட்ட அமைச்சர் ஆளுநரை பலமுறை சந்தித்தும் தற்போது வரை ஒப்புதல் அளிக்காததற்கு என்ன காரணம்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக் கூடாது என ஆளுநரை நியமித்துள்ளார்கள். தமிழகம் தற்போது வளர்ந்த பாதையில் இருக்கிறது. மருத்துவக் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதுதான் திராவிட மாடல்.
நீட் நுழைவு தேர்வு வைத்து தமிழக மாணவர்களை மருத்துவம் படிக்க கூடாது என சதி திட்டம் செய்து வருகிறார்கள். பெட்ரோல் விலை குறைந்தாலும் மத்திய அரசு விலையை குறைத்து தருவதில்லை. மக்களை சாதி, மதம் என பிரிக்கும் வேலையை பாஜகவினர் செய்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருக்கும்வரை தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் இளைஞர் நலனில் அக்கறை கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர் முதல்வர் ஸ்டாலின்.
மருத்துவமனைக்கு வரமுடியாதவர்களுக்கு வீடு தேடி மருத்துவம் அளிக்க வேண்டும் என ஒரே நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் மக்களை தேடி மருத்துவ திட்டம் என்றார். இக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாசிலா மணி, சீத்தாபதி சொக்கலிங்கம், சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய தலைவர்கள் யோகேஸ்வரி, மணிமாறன், சொக்கலிங்கம், விஜய குமார், கண்மணி நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT