Published : 18 Dec 2022 02:42 PM
Last Updated : 18 Dec 2022 02:42 PM

வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா?- அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி 

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

சென்னை: பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் MadeinIndia வா? என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India-வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே மாதம் 2021-ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள்,என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.

நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?" என்று பதிவிட்டிருந்தார். > பார்க்க: ரஃபேல் வாட்ச் சர்ச்சை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x