Published : 18 Dec 2022 12:55 PM
Last Updated : 18 Dec 2022 12:55 PM

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் பால் பொருட்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் நாசர் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "அதிமுக ஆட்சியில் தீபாவளியின்போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. கடந்தாண்டு திமுக ஆட்சியில் 85 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருந்தது மிகப்பெரிய சாதனை. இந்த தீபாவளியின்போது 116 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசரின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார். திருமண விழாவில் முதல்வர் பேசியது: "இன்றைக்கு நாசர் அமைச்சராக இருக்கிறார் என்றால். ஏதோ சாதாரணமாக இந்தப் பொறுப்பு அவருக்கு கிடைத்துவிடவில்லை. முதன்முதலாக 1987-ல் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமாக இருந்தபோது, இளைஞர் அணியின் மாவட்டத் துணை அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அதற்குப் பிறகு, தனது உழைப்பால் உயர்ந்து 1989-ல் இந்த மாவட்டம் இரண்டாக கட்சியின் வளர்ச்சிக்காக பிரிக்கப்பட்ட நேரத்தில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அதற்குப் பின்னால் தொடர்ந்து 1997-ல் ஆவடி நகரத்தின் செயலாளராக பொறுப்பேற்றார். 2001-ல் ஆவடி நகர மன்றத்தின் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்.

இன்றைக்கு நம்முடைய கட்சியின் இளைஞரணி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்றால், இதை முதன்முதலில் பாசறைக் கூட்டம் என்ற தலைப்பில் நம்முடைய இளைஞர் அணி சார்பில், நான் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தேபோது நாங்கள் நடத்தத் தொடங்கினோம். அப்போது முதன்முதலாக பாசறைக் கூட்டம் எங்கே நடந்தது என்றால், ஆவடியில் நம்முடைய நாசர் முன்நின்று நடத்திய அந்தப் பாசறைக் கூட்டம்தான். அந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தி, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நம்முடைய நாசர்.

நான் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். வாரத்திற்கு எப்படியும் நான்கு, ஐந்து நாட்கள் தமிழ்நாட்டில் என்னுடைய சுற்றுப்பயணம் இருந்து கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக கிராமப்பகுதிகளுக்குத்தான் அதிகமாக என்னுடைய பயணத்தை நான் நடத்துவேன். அப்படி போகிற இடங்களில் பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமல்ல, கொடியேற்றுகிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவது உண்டு. இன்றைக்கு நான் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை தமிழ்நாடு முழுவதும் அதிகம் ஏற்றியது யார் என்று கேட்டீர்களானால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதற்கு ஈடாக, இணையாக கழகக்கொடி ஏற்றிவைத்த பெருமை யாருக்கு கிடைத்திருக்கிறது என்றால், அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலினுக்குதான் கிடைத்தது.

அப்படிப்பட்ட நிலையில் நான் அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்கிறபோது, தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறபோது, எனக்குத் துணைக்கு ஒரு மூன்று பேர் வருவார்கள், நாசர் வருவார், அடுத்தது பல்லாவரம் பகுதியைச் சார்ந்த சிங்காரம் வருவார், அதேபோல் நாகையைச் சார்ந்த அசோகன் ஆகிய மூன்று பேர்தான் இணைபிரியாமல் எப்போதும் என்னுடைய சுற்றுப்பயணத்தில் வருவார்கள். ஆனால் துணைக்கு வருவார்களே தவிர, அதிகமாக அந்த வேனில் தூங்கிக்கொண்டு வந்தது யார் என்று கேட்டீர்களானால், நாசர்தான்.

இதை எதற்காக நான் சொல்கிறேனென்றால், அடிக்கடி தூங்கிக்கொண்டு வரும்போது அவரை எழுப்புவதுண்டு. எனக்கு துணைக்கு வந்தாயா? அல்லது உனக்கு நான் துணைக்கு வந்திருக்கிறேனா என்று கேட்டு நான் எழுப்புவதுண்டு. அதனால் என்ன செய்வார் என்றால், எப்போதும் தூக்கம் வருவதற்குத்தான் மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். உடல்நலம் சரியில்லாதவர்கள், தூக்கம் வராதவர்கள் தூக்க மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாசர் என்ன செய்வார் என்றால், தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை போட்டுவிட்டு வருவார், அப்படியிருந்தும் தூங்குவார். அப்படிப்பட்ட நிலையில் அவருடன் பயணம் செய்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அதேபோல, நம்முடைய கட்சியின் சார்பில் ஏதாவது மாநாடுகள் நாம் நடத்துவதாக இருந்தால் அல்லது சிறப்பான பெரிய நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், அந்த நிகழ்ச்சிக்கு முன்னால் எப்போதும் நாம் ஊர்வலம், பேரணி நடத்துவதுண்டு. பேரணி என்பது இளைஞர் அணியை தொடங்கிய பிறகுதான் பேரணியாக மாறியது. அதற்கு முன்னால் ஊர்வலம் நடத்துவோம். அந்த ஊர்வலம் என்பது எங்கு தொடங்கியது, எங்கு முடிந்தது என்றே தெரியாது. அந்த மாதிரி கட்டுக்கடங்காமல் ஊர்வலத்தை நடத்துவதுண்டு.

ஆனால் இளைஞரணி தொடங்கியதற்குப் பிறகு, அதை முறைப்படுத்தினோம், அணிவகுப்பு நடத்தி, வரிசைப்படுத்தி, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி என்று அணிஅணியாக பிரித்து அணிவகுப்பு நடத்தி அதை முறைப்படுத்தினோம். அப்படி முறைப்படுத்தியதற்குப் பிறகு இளைஞர் அணிக்கு, பயிற்சி பெற்ற ஒரு ராணுவமிடுக்கோடு ஒரு அணிவகுப்பை நடத்த வேண்டும் என்று ஒரு முடிவு செய்தோம். அப்படி அந்தப் பயிற்சியை யார் முன்நின்று கொடுத்ததென்றால் நம் நாசர்தான் முன்நின்று கொடுத்தார். பக்கத்தில் உள்ள திருமுல்லைவாயிலில் 10 நாட்கள் பயிற்சி. நானே இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கியிருக்கிறேன், அங்கேயே தங்கி அந்தப் பயிற்சி கொடுத்து, ராணுவ மிடுக்கோடு பல்வேறு மாநாடுகள் தொடங்குகிற நேரத்தில் பேரணியை, அணிவகுப்பை நாங்கள் நடத்தியதுண்டு.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடந்தது. வி.பி.சிங் மற்றும் பல்வேறு வடமாநிலத்தில் இருக்கக்கூடிய தலைவர்கள், ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ் போன்ற தலைவர்களெல்லாம் அந்த தேசிய முன்னணி தொடக்க விழாவிற்கு வந்தார்கள். சென்னையில் உள்ள பனகல் பார்க்கிலிருந்து பேரணி புறப்பட்டு, கடற்கரை வரையில் அந்தப் பேரணியை நடத்தினோம். அண்ணா சாலை, ஆர்ட்ஸ் காலேஜ் பக்கத்தில் இருக்கக்கூடிய இடத்தில் மேடை போட்டு தலைவர்களெல்லாம் அந்த பேரணியை பார்க்கிறார்கள். அதில் முதன்முதலில் இளைஞரணிதான் அணிவகுப்பை நடத்துகிறது. அந்த அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பாக, ராணுவ மிடுக்கோடு பயிற்சி பெற்ற 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து நாசர்தான் முன்னால் அவர்களை அழைத்துக் கொண்டு செல்கிறார். அந்தப் பேரணியைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள், வியந்து பாராட்டினார்கள், போற்றினார்கள். மேடையில் இருந்த வி.பி.சிங் என்னைப் பக்கத்தில் அழைத்து, என்னைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

அதற்குப் பிறகு நான் டெல்லிக்குச் சென்றபோது, பிரதமராக வி.பி.சிங் இருக்கிறார். நான் சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்றக் கட்சிகள் அடங்கிய சில குழுக்கள் Estimate Committee, PUC Committee என பல குழுக்கள் போடுவார்கள், அதில் ஒரு குழுவில் 1989-இல் நான் இடம்பெற்றிருந்தேன். அப்போது டெல்லிக்குச் சென்றிருந்தேன். அப்படி சென்றபோது, பிரதமர் இருந்தால், அவரைப் பார்க்கலாம் என்று நேரம் கேட்டோம். உடனே வி.பி. சிங் நேரம் கொடுத்து, எங்களையெல்லாம் வரவழைத்தார். நாங்கள் கமிட்டியோடு சென்றோம். அந்த கமிட்டியில் நான் மட்டுமல்ல, அன்பில் பொய்யாமொழி, செங்கை சிவம், நம் கட்சியைச் சார்ந்த சிலர், அதிமுகவைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் எனப் பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் என ஒரு 15 பேர்.

அந்த 15 பேரும் பிரதமரைப் பார்க்கச் சென்றபோது, வி.பி.சிங் அவர்களிடத்தில் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருடைய மகன் இவர்தான் என்று என்னை அறிமுகப்படுத்தியபோது, வி.பி. சிங் சொன்னார், "இவரை எனக்கு நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்களா? சென்னையில் தேசிய முன்னணி தொடக்கவிழா நடைபெற்றபோது ராணுவ மிடுக்கோடு அணிவகுப்பு நடந்ததே அதை வழிநடத்தி வந்தவர்தானே இவர்?" என்று சொன்னார். இது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, நாசருக்கும் கிடைத்திருக்கும் பெருமையாகத்தான் கருதுகிறேன். அந்த அளவிற்கு, ஒரு பொறுப்பு கொடுத்தால் அந்தப் பொறுப்பை முழுமையாக, வெற்றிகரமாக எல்லோரும் பெருமைப்படக்கூடிய வகையில் அதை நிறைவேற்றும் ஆற்றலைப் பெற்றவர் நம்முடைய அருமை நண்பர் நாசர் அவர்கள் என்பதை நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

எதைச் செய்தாலும், அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். திருமணத்திற்குத் தேதி கொடுத்தேன், தேதியை கொடுத்தவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது. ஏனென்றால், இவர் ஆடம்பரமாக செய்துவிடுவாரே, பிரம்மாண்டமாக செய்துவிடுவாரே, அதனால் ஏதாவது விமர்சனம் வந்துவிடுமே, நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சினையில்லை, ஆனால் அமைச்சர் பொறுப்பிலே இருக்கக்கூடிய நாசருக்கு ஏதாவது இழுக்கு வந்துவிட்டால், அதை விமர்சனம் செய்ய பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தும்மினால் போதும், அதைக் கண்டுபிடித்து, அதை சொல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வெளியிடக்கூடிய ஊடகங்களெல்லாம் இன்றைக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு இன்றைக்கு சோசியல் மீடியா வளர்ந்து இருக்கிறது. அதனால், நான் அவரை அழைத்து சொன்னேன், "மிகவும் எளிமையாக இருக்க வேண்டும், மிகவும் அமைதியாக இருக்க வேண்டும், கட்சிக் கொடியை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டுங்கள். ஏனென்றால், கலைஞர் அவர்கள் அந்தக் கொடியை ஏற்றி வைத்து இந்த இயக்கத்தை வளர்த்து இருக்கிறார். அதற்கு நான் கட்டுப்பாடு சொல்ல மாட்டேன். ஆனால் பேனர் வேண்டாம், கட்-அவுட் வேண்டாம், அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், ஆனால் அதே நேரத்தில் இந்த இயக்கத்திற்கு வலுசேர்க்கின்ற வகையில் நீ உன்னுடைய பணியை அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று நான் கேட்டுக் கொண்டேன். அதை அப்படியே ஏற்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே அதற்காகவே நான் நாசர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய நாசர் இன்றைக்குப் பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், பாராட்டக்கூடிய அளவிற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன், பால் விலை குறைந்துவிட்டது. அதுவே மக்களுக்கு எவ்வளவு பெரிய சாதகமான சூழல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஆவினின் புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டதும் இவர் அமைச்சராக இருக்கக்கூடிய நேரத்தில்தான்.

தீபாவளியின் போது நெய் விற்பனை அதிகமானது, புதிய இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 12 விதமான கேக் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் தீபாவளியின் போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு நம்முடைய ஆட்சியில் 85 கோடி ரூபாயாகவும், இந்த தீபாவளியின்போது 116 கோடி ரூபாயாகவும் உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள். இது பெரிய சாதனை. இதன் மூலமாக கடந்த ஆட்சியை விட பால் பொருட்கள் விற்பனை என்பது பல மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது.

இவை அனைத்திற்கும் முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் மட்டும் காரணமல்ல, இந்தத் துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய நாசரும் ஒரு காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, பண்டிகைக் காலம் வந்துவிட்டால் போதும் நாசரே தலையில் ஒரு தொப்பியை போட்டுக் கொண்டு, தொப்பி என்றால் முஸ்லீம்கள் போடும் தொப்பியை நான் சொல்லவில்லை. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பாதுகாப்புக்கு போடுவார்கள், அந்தத் தொப்பியை போட்டுக்கொண்டு, ஸ்வீட் தயாரிக்கிற இடத்தில் நாசர் நிற்கின்ற காட்சியை டிவியில் பார்த்து நானே ரசித்திருக்கிறேன். அந்தளவுக்குத் தன்னை எதிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றுபவர்.

முகச் சிதைவு நோய் ஏற்பட்டு ஒரு பெண் பாதிக்கப்பட்டதெல்லாம் நீங்கள் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். தான்யா என்ற பள்ளிச் சிறுமிக்கு சவீதா மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தோம். அந்தச் சிறுமி தொலைக்காட்சியில், "என்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா, நான் பள்ளிக்குச் சென்றால், என்னை எல்லோரும் கேலி செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள், அதனால் பள்ளிக்குச் செல்லாமல் என் படிப்பு பாழாகிக் கொண்டிருக்கிறது, இதற்கு ஏதாவது எனக்கு வழி கிடையாதா?" என்று பேட்டி கொடுத்தார். அதை நான் பார்த்தேன். பார்த்தவுடனே ஆவடி பகுதியில் இருப்பதால் உடனே நாசருக்கு போன் போட்டு ஒரு வார்த்தைதான் சொன்னேன். சொன்ன உடனே அந்த இடத்திற்குச் சென்று, அந்தச் சிறுமியை உரிய மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பிறகு சவீதா மருத்துமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தார். அதன் பிறகு ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. ஏதோ சிகிச்சை நடந்தது, முடிந்தது என்று விட்டுவிடாமல், அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அத்தனையையும் செய்துகொடுத்தார். இன்றைக்கு அந்தப் பெண் சிரித்த முகத்தோடு, அந்தச் முகச் சிதைவு சரிசெய்யப்பட்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அதற்கும் காரணம் நாசர் என்பதை எண்ணி நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். எந்தப் பணியைக் கொடுத்தாலும், அதை சிறப்போடு நிறைவேற்றித் தரக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்று பிரபலமான ஆங்கில பத்திரிகையான இந்தியா டுடே-வில் வெளிவந்த செய்திகளையெல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். நான் ஏற்கனவே சொன்னேன், கடந்த ஆண்டே குறிப்பிட்டுச் சொன்னேன். 'நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின்' என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்ல வேண்டும், அதுதான் எனக்குப் பெருமை என்று சொன்னேன்.

இந்த ஆண்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னால், தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, இங்கிருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லோருடைய கூட்டு முயற்சிதான் இன்றைக்கு இந்த பெற்றி நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றியிலே பங்கேற்கக் கூடியவர்களில் ஒருவராகத்தான் நம்முடைய நாசர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய இல்லத்தில் நடைபெறுகிற மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x