Published : 18 Dec 2022 09:03 AM
Last Updated : 18 Dec 2022 09:03 AM

உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடத்துவதில் தாம்பரம் திமுகவினர் இடையே கோஷ்டி மோதல்

பிரதிநிதித்துவப் படம்

தாம்பரம்: திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் பெருங்களத்துார் தெற்கு பகுதி திமுக சார்பில், இரும்புலியூர் டிடிகேநகர் மைதானத்தில் நேற்று கபடிபோட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்நிகழ்ச்சி நடைபெற்றால் சட்டம்- ஒழுங்குபிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் தரப்பில் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் திரண்டு வந்து போட்டியை நடத்தக் கூடாது எனத் தடுத்தனர். அதேநேரத்தில், போட்டியை தொடக்கிவைக்க, அமைச்சர் அன்பரசனின் ஆதாரவளரான மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் வந்தனர்.

ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவியது. பின்னர் வாய்த் தகராறு ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டன.

தாம்பரம் மாநகர திமுகவில் சமீபகாலமாக கோஷ்டி பூசல் அதிகரித்துவிட்டது. எம்எல்ஏ மற்றும் அமைச்சர் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் போட்டியில் பங்கேற்க வந்த கபடி வீரர்கள் பல மணி நேரமாக காத்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x