Published : 18 Dec 2022 04:57 AM
Last Updated : 18 Dec 2022 04:57 AM
சென்னை: திமுக முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் நேற்று புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
திமுக சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, புகைப்படக் கலைஞர் கோவை சுப்பு,அன்பழகன் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சி, திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்துப் பார்வையிட்டார். இதில், அன்பழகனின் இளமைக்கால படங்கள், பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, முதல்வர் ஸ்டாலின், சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களுடனான படங்கள், அன்பழகன் அமைச்சராகப் பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறுகூட்டங்களில் பங்கேற்ற புகைப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், உடன் வந்தவர்களுடன் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்துபுகைப்படக் கலைஞர் கோவை சுப்பு கூறும்போது, "நான் எடுத்த படங்கள் மற்றும் அவரது வீட்டில் இருந்து பெறப்பட்ட, அவரது இளமைக்கால படங்கள் என மொத்தம் 720 படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி டிச. 18, 19-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) காலை 10 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
கருணாநிதி, ஸ்டாலின் படங்கள்..: விரைவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு வருகிறது. அதையொட்டியும் புகைப்படக் கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பிறந்த நாட்களிலும் இதுபோன்ற கண்காட்சி நடத்தும் திட்டம் உள்ளது. கருணாநிதி தொடர்பாக 7 லட்சம் நெகடிவ் மற்றும் 40 லட்சம் புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. ஸ்டாலின் தொடர்பாக ஒரு கோடி படங்கள், உதயநிதி தொடர்பான 30 லட்சம் படங்கள் என்னிடம் உள்ளன" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், கட்சிப் பொருளாளர் டி.ஆர்.பாலு, அன்பழகனின் மகன் அ.அன்புச்செல்வன், பேரன் அ.வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT