Last Updated : 18 Dec, 2022 04:35 AM

 

Published : 18 Dec 2022 04:35 AM
Last Updated : 18 Dec 2022 04:35 AM

கல்வி, மருத்துவம், தொழிற்சாலை என அனைத்து கட்டமைப்புகளிலும் முன்னேற்ற திட்டங்களுக்காக காத்திருக்கும் முசிறி

முசிறி காவிரி ஆற்றுக்குச் செல்லும் பகுதியில் பராமரிப்பின்றி கட்டுமானங்கள் சிதிலமடைந்து காணப்படும் பரிசல்துறை. (அடுத்த படம்) மின் விளக்குகள் இல்லாத தந்தை பெரியார் பாலம்.படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி: கல்வி, மருத்துவம், தொழிற்சாலை, விவசாயம் என அனைத்து கட்டமைப்புகளிலும் முசிறி பகுதியில் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருச்சி- சேலம் நெடுஞ்சாலை மற்றும் கரூர்-துறையூர் சாலைக்கு மத்தியில் உள்ள முசிறி நகரம், சுற்றுவட்டாரத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுடனான அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாததாக விளங்குகிறது. அப்படிப்பட்ட சூழலிலும் மாவட்டத்திலுள்ள பிற நகரங்களை ஒப்பிடுகையில் கல்வி, மருத்துவம், தொழில்வளம் என அனைத்திலும் முசிறியின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதாக வேதனைப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்.

கல்வித் துறை கவனிக்குமா?: இது குறித்து முசிறியைச் சேர்ந்த முருகன் கூறும்போது, ‘‘1969-ம் ஆண்டிலேயே முசிறியில் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், இன்றளவும் மிகக் குறைந்த பாடப்பிரிவுகள் மட்டுமே இங்கு பயிற்று விக்கப்படுகின்றன. அதேபோல, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடங்கள் பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் உள்ளன. இங்கு செயல்பட்டு வந்த முசிறி மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது லால்குடிக்கு கொண்டு சென்றுவிட்டனர். அரசு பெண்கள் கல்லூரி, அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றை முசிறிக்கு கொண்டு வர வேண்டும். விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார்.

‘சிப்காட்’ அமைக்கப்படுமா?: முசிறியைச் சேர்ந்த கார்த்திக் கூறும்போது, “முசிறி பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த தொழிற்சாலையும் இல்லை. எனவே இப்பகுதி மக்கள் திருச்சி, கரூர், நாமக்கல் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து பணிபுரிந்து வருகின்றனர். வருவாயில் பாதி போக்குவரத்துக்கே செலவாகிவிடுவதால், அவர்களில் பலர் விரக்தியில் உள்ளூரிலேயே முடங்கி விடும் நிலை உள்ளது. இதைத்தவிர்க்க முசிறியை மையப்படுத்தி ‘சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்’' என்றார்.

4 வழிச்சாலை அமைக்கப்படுமா?: சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் கூறும்போது, ‘‘திருச்சி- நாமக்கல் சாலையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. நிகழாண்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் நாமக்கல்லில் இருந்து தொட்டியம் வரை 4 வழிச் சாலையும், தொட்டியத்தில் இருந்து முசிறி வரை இருவழிச் சாலையும் அமைக்கும் பணிகள் ரூ.183 கோடியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் தற்போது தொடங்கியுள்ளன.

மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து நொச்சியம், வாத்தலை வழியாக முசிறி பெரியார் பாலம் வரையிலான 31 கி.மீ தொலைவுக்கான சாலை விரிவாக்கம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதையும் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். இந்த சாலையின் ஓரங்களில் ஆறு, வாய்க்கால் கரைகள் இருப்பதால் 4 வழிச்சாலை அமைக்க வாய்ப்பில்லாவிட்டால், முசிறியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கூத்தூர் ரவுண்டானா வரை புதிய 4 வழிச்சாலை அமைக்க வேண்டும்’’ என்றார்.

மேட்டூர்- அய்யாறு இணையுமா?: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தேசியத் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, ‘‘காவிரிக் கரையில் இருந்தபோதிலும் முசிறியின் ஒரு பகுதிக்கு மட்டுமே காவிரி பாசன வசதி கிடைக்கிறது. மற்றொரு பகுதி வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக்கிறது. எனவே, மேட்டூர் அணையின் வடக்குப் பகுதியில் நீர் திறந்து எடப்பாடி, திருச்செங்கோடு, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, மூன்றடைப்பு, நாமக்கல், சேந்தமங்கலம், கோம்பை, திருச்சி மாவட்டம் மகாதேவி, பச்சபெருமாள்பட்டி வழியாக கால்வாய் அமைத்து அய்யாற்றில் இணைக்கும் திட்டம் ஏற்கெனவே பொதுப்பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது செயல்பாட்டுக்கு வந்தால் முசிறி பகுதியிலுள்ள கண்ணனூர் பாளையம், திருத்தலையூர், திருத்தியமலை, தொட்டியம், துறையூர் பகுதிகளிலுள்ள அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பிவிடும். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணை காட்டி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

அரசு மருத்துவமனை தரம் உயருமா?: முசிறியைச் சேர்ந்த சுஜிதா கூறும்போது, “முசிறி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். நகராட்சி குப்பை கிடங்கை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும். காவிரியிலுள்ள பெரியார் பாலத்தில் மின் விளக்கு வசதி செய்துதர வேண்டும்’’ என்றார்.

என்ன சொல்கிறார் எம்எல்ஏ?: இது தொடர்பாக, முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜனிடம் கேட்டபோது, ‘‘நான் எம்எல்ஏ ஆன ஒன்றரை ஆண்டில் முசிறி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்துக்கு 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உன்னியூர்- நெரூர் இடையே காவிரியின் குறுக்கே ரூ.100 கோடியில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. காவிரியிலிருந்து நாகைநல்லூர், திருத்தலையூர் ஏரிகளுக்கு நீரேற்று திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முசிறி- நம்பர் 1 டோல்கேட் வரை 4 வழிச்சாலையாக மாற்ற சட்டப்பேரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதகு பால கல்வெட்டின் மீதமுள்ள பகுதிகளை மீட்டு, அதிலுள்ள தகவல்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

‘மதகு பாலத்துக்குள்' மறைந்து கிடக்கும் வரலாறு: முசிறியைச் சேர்ந்த கல்வியாளர் துளசிதாசன் கூறும்போது, ‘‘முசிறி பகுதியில் ஏராளமான வரலாற்று அடையாளச் சின்னங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக முசிறி காவிரி ஆற்றில் உள்ள பழங்கால கட்டமைப்புடன் கூடிய பரிசல் துறையை சீரமைக்க வேண்டும். அதனருகேயுள்ள ராணி மங்கம்மாள் பாலம் என அழைக்கப்படும் மதகு பாலத்தை பாதுகாப்பதுடன், அதன் வரலாற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

இது குறித்து தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘‘மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச்சோழன்பேட்டையில் காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் இந்த மதகு பாலம் கட்டப்பட்டுள்ளது. குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர்தான் இந்த மதகு பாலத்தை கட்டியுள்ளார். இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான் இதனை ராணி மங்கம்மாள் பாலம் எனக் கூறி வருகின்றனர். அவரால் இந்த பாலம் கட்டப்படவில்லை. சோழர் ஆட்சி காலத்தில் காவிரியையொட்டி கட்டப்பட்ட மதகு பாலங்களில், இதுமட்டுமே உரிய கல்வெட்டு ஆதாரத்துடன் இப்போதும் இருக்கிறது. எனவே இதை முறையாக பாதுகாக்க வேண்டும்.

சோழர் காலத்தில் இந்த மதகு திறப்பான்கள் மர பலகைகளில் இருந்திருக்கின்றன. பொதுப்பணித் துறையினர் அதை ரோலிங் ஷட்டர்களாக மாற்றியபோது, மதகு பாலத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் பாதியை, செங்கல்சுவர் எழுப்பி மறைத்து விட்டனர். அந்த செங்கல் சுவரை அகற்றி, அதற்குள் மறைந்திருக்கும் மதகு பால கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் மீத தகவல்களையும் கண்டறிய தமிழக அரசும், இந்திய தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x