Published : 17 Dec 2022 11:39 PM
Last Updated : 17 Dec 2022 11:39 PM

''ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே'' பாடலை பாட ஆசை - பள்ளி நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சேத்துப்பட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்தப் பள்ளி முதல்வர் ஸ்டாலின் படித்த பள்ளி என்பதால் விழாவில் பேசியபோது பழைய நினைவுகளை நியாபகப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இங்கே ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியரும், என்னுடைய தமிழ் ஆசிரியருமான ஜெயராமன், "உன்னை மாணவனாகப் பெற்றதில் நாம் பெருமை அடைகிறோம்" என்று சொன்னார். நீங்கள் மாணவனாக பெற்றதில் எப்படி பெருமை அடைந்தீர்களோ, உங்களிடத்திலே நான் தமிழ் பாடத்தை கற்க கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன். தமிழைக் கற்றுக் கொள்ளக்கூடிய, தமிழைப் பயிலக் கூடிய வாய்ப்பை மட்டும் நீங்கள் தரவில்லை; சாதாரணமாக நீங்கள் சொல்லித் தரவில்லை. அடித்து, அடித்து சொல்லி கொடுத்தீர்கள். அதுதான் எனக்குப் பெருமை.

சி.எம்-ஆக இங்கே வரவில்லை. நான் ஒரு ஸ்டூடண்ட்டாகத்தான், உங்களுடைய பழைய ஃபிரண்ட்-ஆகத்தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். மாணவர் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளி காலம்தான் அதை மகிழ்ச்சியோடு நாம் கழித்திருக்கிறோம். அத்தகைய பள்ளிக்கூடத்தில் எப்படி எல்லாம் துள்ளி திரிந்தோம், அதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன்.

கோபாலபுரத்தில் இருந்தபோது, நான் அமைச்சருடைய மகனாக இருந்த நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு நான் பஸ்ஸில் தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன். சில சமயம் குறைந்சபட்சம் ஒரு 3 அல்லது 4 கிலோமீட்டர் நடந்துதான் வருவேன். அதெல்லாம் பழைய நினைவு. அப்படித்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு நான் வந்து சென்றேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு.

அதேமாதிரி தான் இப்போதும் இங்கே நான் முதலமைச்சராக வரவில்லை என்று சொன்னேன். உங்கள் நண்பராகத் தான் வந்திருக்கிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், செக்கியூரிட்டி எல்லாம் மட்டும் இல்லையென்றால், அதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்றால், நிச்சயமாக நான் பஸ்ஸிலேயோ சைக்கிளிலோ இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன். ஆனால், செக்கியூரிட்டி விட மாட்டார்கள்.

இங்கே இருக்கக்கூடிய சிலர் முகத்தை எல்லாம் பார்க்கிறபோது, சில ஆசிரியர்களை பார்க்கிறபோது, குறிப்பாக தமிழாசிரியர் ஜெயராமனை பார்க்கிறபோது ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்கிற பாட்டுதான் என் ஞாபகத்திற்கு வருகிறது. இப்போது எனக்கு அதை பாட வேண்டும் போல ஆசை. உலகத்திலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது கடந்தகால இனிமையான நினைவுகள் தான். ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது இதுபோன்ற ஞாபகங்கள்தான்.

ஒரு பள்ளியில் இருந்து எத்தனையோ டாக்டர்கள் வந்திருப்பார்கள். பொறியாளர்கள் வந்திருப்பார்கள். வழக்கறிஞர்கள் வந்திருப்பார்கள். ஆனால் முதலமைச்சரை உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதில் எனக்கும் பெருமை தான்" என்று பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x