Published : 17 Dec 2022 07:38 PM
Last Updated : 17 Dec 2022 07:38 PM
மதுரை: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பால், மதுரையில் நடக்க இருந்த 48-வது ஜிஎஸ்டி கூட்டம் ரத்தாகி இன்று காணொலியில் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி (சரக்கு மற்றும் சேவைவரி) விதிப்பு முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்வதற்காகவும் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. கவுன்சிலின் தலைவராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கவுன்சில் கூட்டப்பட்டு வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது, பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பு முறையில் உள்ள பிரச்சினைகள் வணிகர்களிடம் கருத்து கேட்டு ஆலோசிக்கப்படும். இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில நிதியமைச்சர்கள், நிதித் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். கடைசியாக 47-வது ஜிஎஸ்டி கூட்டம், சண்டிகரில் நடந்தது.
அடுத்து நடப்பதாக அறிவிக்கப்பட்ட 48-வது ஜிஎஸ்டி கூட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று மதுரையில் செப்டம்பரிலே 48-வது ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில், 48-வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று காணொலி மூலம் நடந்தது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் பங்கேற்றார்.
இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன் கடந்த சில மாதமாகவே ஜிஎஸ்டி வரி விதிப்பை மறுசீரைப்புச் செய்ய வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டி வந்தனர். அதனால், மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் நடத்தும்போது நாடு முழுவதும் இருந்து வணிகர்களை திரட்டி உண்ணாவிரதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன் காரணமாவே மதுரையில் நடக்க இருந்த ஜிஎஸ்டி கூட்டம், காணொலியில் நடந்து முடிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், மதுரையில் இந்தக் கூட்டம் நடக்கும்போது நேரடியாக ஜிஎஸ்டி தொடர்பான தங்கள் கோரிக்கைகள், ஆதங்கங்களை தெரிவிக்க காத்திருந்த தென் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர், தொழில்முனைவோர்கள், வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறும்போது, “கடந்த 2017-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமாகும்போது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வரி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டும்போது வரி சலுகைகள், வரி விலக்கு அறிவிக்கப்படும் என்று கூறினார். ஆனால், தற்போது 1.40 லட்சம் கோடி வரி வருவாய் வந்து கொண்டிருக்கிறது.
47-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிறு வணிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பாதமாக அமைந்தது. சிறுதானியங்கள், அரிசி, பருப்பு, கோதுமை போன்றவை 25 கிலோவுக்கு கீழ் பேக் செய்து விற்றால் வரி என்று கூறிவிட்டார்கள். பாக்கெட் போடாமல் பொதுமக்கள் எப்படி உணவுப் பொருட்களை வாங்குவார்கள். பாக்கெட் போட்டால் மட்டுமே தூசி படாது. தரமாக இருக்கும். சத்துமாவு, சிறுதானியங்களில் கூட 18 சதவீதம் வரி போட்டுள்ளார்கள். 25 கிலோவுக்கு கீழ் பேக்கிங் பொருட்களுக்கு வரி என்று கூறியுள்ளதால் மக்கள் பயன்படுத்தும் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கு வரி வந்துவிடும்.
ஒரு பொருளுக்கு வரி அல்லது வரி விலக்கு இருக்க வேண்டுமே தவிர பிராண்ட்டுக்கு வரி விதிப்பது தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற குளறுபடியான வரிவிதிப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் நடத்தும்போது நாடு முழுவதும் வணிகர்களை திரட்டி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தோம்.
அதற்கு அகில இந்திய வணிகர் சங்க நிர்வாகி பிரவீன் கண்டேல்வால் 15 மாநிலங்களில் இருந்து வணிகர்களை அழைத்து வருவதாக கூறினார். அதனாலே, தற்போது மதுரையில் நடக்க இருந்த ஜிஎஸ்டி கூட்டத்தை ரத்து செய்து தற்போது காணொலியில் நடத்தியிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் அதிகாரிகள் பரிந்துரைகளை கொண்டு தீர்மானங்கள் கொண்டு வருகின்றனர். வருமானம் வந்தால் போதும், தொழில் எப்படி போனால் என்ற நோக்கில் அரசுகள் செயல்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT