Published : 17 Dec 2022 04:32 PM
Last Updated : 17 Dec 2022 04:32 PM

சென்னையில் ரூ.10 கோடியில் 12 மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

கோப்புப் படம்

சென்னை: சென்னையில் ரூ.10 கோடி செலவில் 12 மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 ரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கியப் பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரி சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் உள்ளன. இவற்றில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து, அழகுபடுத்தும் பணி செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதன்படி ரூ.10 கோடி செலவில் 12 மேம்பாலங்களை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "முதற்கட்டமாக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.10.26 கோடி மதிப்பீட்டில் 12 மேம்பாலங்களில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இவற்றில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிக்குட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி ஆகிய 5 மேம்பாலங்களில் அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது.

ரூ.8.51 கோடி மதிப்பீட்டில் பாந்தியன் சாலை-காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை மேம்பாலம், சக்கரபாணி தெரு மேம்பாலம், காமாட்சி மருத்துவமனை மேம்பாலம், வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் மற்றும் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் ஆகிய 6 மேம்பாலங்களில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரம்பூர் சுரங்கப்பாதையில் ரயில்வே பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x