Published : 17 Dec 2022 02:54 PM
Last Updated : 17 Dec 2022 02:54 PM
சென்னை: விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வேளாண் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தலைமையிலான அதிமுக அரசில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் கீழ், அவினாசி சட்டமன்ற தொகுதியில், அவினாசி மற்றும் அன்னூர் தாலுகாக்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள வேளாண் நிலங்களுக்கும் பாசன வசதி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் காரணமாக தங்களது நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம்.
இதன்மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என்று இப்பகுதி விவசாயிகள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், இந்த திமுக அரசு அவினாசி, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில், சுமார் 3800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, டிட்கோ சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 16.8.2021-ல் அரசாணை வெளியிட்டு, அப்பகுதி வேளாண் மக்களின் தலையில் இடியை இறக்கியது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று திமுக அரசு ஒரு அரசாணையை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. இது, இப்பகுதி விவசாயப் பெருமக்களின் ஒருங்கிணைந்த
போராட்டத்திற்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களது வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இந்த திமுக அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக என்றென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று மீண்டும்ஒருமுறை உறுதியளிக்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT