Published : 17 Dec 2022 11:59 AM
Last Updated : 17 Dec 2022 11:59 AM
சென்னை: எனது தாயை தவறாக விமர்சித்து வரும் சசிகலா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் சசிகலா அளித்த வாக்குமூலத்தில், "ஜெயலலிதா கடைசி வரை ஜெ.தீபா மீது நல்ல மதிப்பு கொண்டிருக்கவில்லை" என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜெ.தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோவில் ஜெ.தீபா பேசுகையில், "எனது தாய் விஜயலட்சுமி பற்றி பேச எங்கள் குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லாத சசிகலா என்ற மூன்றாவது நபருக்கு எந்த விதமான அருகதையும் இல்லை. இதை என்னுடைய எச்சரிக்கையாக அவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் டெலிகிராம் மூலம் புகார் கொடுத்தாக கூறுகிறார்கள். அது உண்மை தான். ஆனால் அது எங்கள் அத்தை ஜெயலலிதா மேல் இல்லை. சசிகலா மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து இருக்கு என்று தான் அந்த டெலிகிராம் கொடுத்தோம்.
வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தால் ஏற்பட்ட மனக்கசப்புதான் எங்கள் உறவு முறிந்ததற்கு காரணம். இதை மாற்றி தன் மீது இருந்த தவறுகளை எல்லாம் மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை சசிகலா செய்து வருகிறார். சசிகலா போன்று பொய் கூறுபவர்கள் நாங்கள் இல்லை. சசிகலா சொல்வதைப் போல் எங்கள் அம்மா கருணாநிதியை ஒரு முறை கூட சந்தித்தது இல்லை.
நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் காவல் துறையிடம் அதை நிரூபிக்க வேண்டும். மக்களிடம் நிரூபிக்க வேண்டும். அதை விட்டு என்னைப் பற்றியும், எனது அம்மா பற்றியும் தவறாக விமர்சிப்பது சரியானது இல்லை. இதற்காக சசிகலா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
தமிழக அரசு இந்த கொலைகார கூட்டத்தின் மீது நடவடிக்க எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் சசிகலா மற்றும் அவரைச் சேர்ந்தவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு தெய்வம் எங்கள் அம்மா. இதற்கு சசிகலா பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT