Published : 17 Dec 2022 03:53 AM
Last Updated : 17 Dec 2022 03:53 AM
சென்னை: தொழிலாளர் நலத் துறை சார்பில் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு ஐடிஐ கட்டிடங்கள், விடுதிகள், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய ஐடிஐக்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.7.06 கோடியிலும், திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் ரூ.7.46 கோடியிலும் புதிய ஐடிஐ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், தருமபுரியில் ரூ.3.20 கோடியில் ஐடிஐயில் மகளிர் விடுதிக் கட்டிடம், சென்னை, அம்பத்தூரில் ரூ.1.07 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான சென்னை மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT