Published : 24 Dec 2016 09:52 AM
Last Updated : 24 Dec 2016 09:52 AM

கரூர் மாவட்டம் மாயனூரில் மணல் லாரிகளுக்கு டோக்கன் வழங்குவதில் தகராறு: போலீஸ் மீது தாக்குதல்; லாரி ஓட்டுநர்கள் 20 பேர் கைது

கரூர் மாவட்டம் மாயனூரில் முன்னுரிமை அடிப்படையில் மணல் எடுக்க டோக்கன் வழங்குவதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மணல் லாரி ஓட்டுநர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால், போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதுடன் மணல் லாரி டோக்கன் வழங்கும் 3 மையங்களுக்கு தீ வைத்தனர். இதுதொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூ ரில் உள்ள மணல் குவாரியில் எடுக் கப்படும் மணல், அங்குள்ள மணல் இருப்பு நிலையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மாயனூரில் லாரி நிறுத்தும் இடத்தில் வரிசை அடிப்படையில் லாரிகளுக்கு டோக் கன் வழங்கப்படுகிறது. இங்கு 1,000 லாரிகள் நிறுத்தப்பட்டு இருக்கும்.

மாயனூரில் லாரி நிறுத்தும் இடத்தில் கடந்த 3 நாட்களாக மணல் எடுக்க டோக்கன் வழங்காததுடன், டோக்கன் வழங்கியவர்களுக்கு மணல் வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், வரிசையில் காத்திருக் காமல் முன்னுரிமை டோக்கன் பெற்றவர்கள் உடனடியாக மணல் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, முன்னுரிமை அடிப் படையில் டோக்கன் வழங்குவதைக் கண்டித்து அங்கிருந்த மணல் லாரி ஓட்டுநர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மாயனூரில் நேற்று முன்தினம் இரவு லாரிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த மணல் லாரி ஓட்டுநர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும், அங்கிருந்த டோக்கன் வழங்கும் 3 மையங்களுக்கு (குடிசைகளுக்கு) தீ வைத்தனர். கல் வீச்சு தாக்குதலில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் ஏட்டு ரத்தினகிரி காயமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மாயனூர் போலீஸில் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து, மணல் லாரி ஓட்டுநர்கள் 20 பேரை நேற்று கைது செய்தார்.

மணல் எடுப்பது குறைந்துவிட்டது

தமிழக மணல் ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டன. தற்போது மணல் குவாரிகள் செயல்பாட்டுக்கு வந்தபோதும் குவாரியில் மணல் எடுக்கப்படும் அளவு கணிசமாக குறைந்துவிட்டது.

மறியலில் ஈடுபட்ட மணல் லாரி ஓட்டுநர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x