Published : 17 Dec 2022 03:44 AM
Last Updated : 17 Dec 2022 03:44 AM
சென்னை: தமிழக அரசின் சலுகைகள், மானியங்கள், நலத் திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருவாய், சமூக நலம், மின்சாரம் உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய அரசின் திட்டங்களிலும், மாநில நிதியை இணைத்து வீட்டுவசதி, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதுதவிர, மத்திய அரசு நிறுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை, மாநில அரசு தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நலத் திட்டங்களின் பயன்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய ஆதார் எண்ணைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சமூக நலத் துறையின் கீழ் பல்வேறு பயன்களைப் பெறும் பயனாளிகளுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில், போலி வாக்காளர்களைக் கண்டறியும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இச்சூழலில், அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசிதழில் இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெரியவர்கள், குழந்தைகள் என தனித்தனியே வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன
அறிவிக்கை வெளியீடு: இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் சேவைகள், திட்டப்பயன்கள், மானியங்கள் வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பயனாளிகள் நேரடியாக திட்டப் பலன்களைப் பெற முடிகிறது. அதேபோல, ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனி ஆவணங்களை அளிக்க வேண்டிய நிலையும் தவிர்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மூலம், ஆன்லைன் வாயிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே உதவித்தொகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழக அரசுப் பணியாளர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு திட்டங்களின் பலன்கள் ஆகியவை தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் சட்டப்படி, அரசுத் திட்டப் பலன்களைப் பெறும் பயனாளிகள், ஆதார் எண்ணை வைத்திருக்கவேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆதார் எண் பெற வேண்டும்: பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக, ஆதார் எண்ணைப் பெற வேண்டும். இதற்கு, அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம்.
ஆதார் எண்ணைப் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம், தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.
குழந்தைகளுக்கும் பொருந்தும்: திட்டப் பயனாளிகள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில், அவர்களும் ஆதார்எண் வழங்க வேண்டும். ஆதார் இல்லாவிட்டால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஆதார் எண் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆதார் எண் கிடைக்கும் வரை, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்று அல்லது பிறப்புச் சான்று, பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பெற்றோர் பெயர் அடங்கிய பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்.
இதுதவிர, பயனாளியின் பெற்றோர், பாதுகாவலர்களுடனான உறவு குறித்த சான்றாக பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னாள் படைவீரர் என்பதற்கான அட்டை, ஓய்வூதிய அட்டை,படைவீரர் கேன்டீன் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்.
ஆதார் அங்கீகாரம் பெறும்போது, விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால், முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகாரம் பெறலாம். அல்லது ஒருமுறைகடவுச்சொல் மூலம் அங்கீகாரம் பெறலாம். அதுவும் சாத்தியப்படாவிட்டால், ஆதார் அட்டையில் உள்ள க்யூஆர் கோடு மூலம் உறுதி செய்யலாம்.
மேலும், பயனாளி அல்லாத எவரும், நலத் திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லை என்பதை, திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பயனாளி அளிக்கும் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர், துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த அறிவிக்கை வெளியிட்ட நாளில் இருந்து, இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இவ்வாறு தமிழக அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT