Last Updated : 17 Dec, 2022 06:16 AM

2  

Published : 17 Dec 2022 06:16 AM
Last Updated : 17 Dec 2022 06:16 AM

திருச்சி | 12 ஆண்டுகளுக்குப் பின் செடிகொடிகள், புதர்கள் முழுமையாக அகற்றம்; முதல்வர் வருகையால் பொலிவு பெறும் அண்ணா விளையாட்டரங்கம்

திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மேற்கொள்ளப்படும் பணிகளால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா விளையாட்டரங்க வளாகம் முழுவதும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே 37.5 ஏக்கர் பரப்பளவுகொண்ட அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் மைதானங்கள் கட்டமைப்புள்ள இடங்கள் தவிர,மற்ற காலியிடங்களில் செடிகொடிகள், புதர்கள் மண்டியிருந்தன.

கடந்த 2010-ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத் தொடக்க விழா, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் இந்த விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதற்காக விளையாட்டரங்க வளாகத்தில் மண்டியிருந்த செடிகொடிகள், புதர்கள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டன. அதன்பின் உள்ளரங்க மைதானத்தை ஒட்டிய பகுதிகளும், செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தை ஒட்டிய பகுதிகளும் பல ஆண்டுகளாக புதர்மண்டி காணப்பட்டன.

இந்த நிலையில், அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் டிச.28-ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக செயற்கை புல்தரை ஹாக்கி மைதானம், உள்ளரங்க மைதானத்துக்கு இடைப்பட்ட காலி இடத்தில் விழா மேடை அமைக்கப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதியிலிருந்த செடி கொடிகள், புதர்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த சில மரங்களும் வெட்டப்பட்டன. வளாகம்முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா விளையாட்டரங்கம் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகிறது. இதற்கிடையே விளையாட்டு மைதானத்தில் அரசு விழா நடத்துவது குறித்தும், மரங்கள் வெட்டப்படுவது குறித்தும் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது மைதானத்தில் விழா நடத்தப்படவில்லை. கால்பந்து பயிற்சி மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காலி இடத்தில் தான் விழா நடைபெறுகிறது.

மேலும், இங்குள்ள மரங்களை வெட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே அனுமதி பெறப்பட்டுள்ளது. வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும்பதிலாக தலா 10 மரக்கன்றுகள், இதே வளாகத்தில் ஓரிரு நாட்களில் நடப்படும்’’ என்றனர்.

இதையும் செய்தால் நல்லது: வீரர்கள் எதிர்பார்ப்பு

அண்ணா விளையாட்டரங்குக்கு தேவையான வசதிகள் குறித்து வீரர்களிடம் கேட்டபோது, ‘‘தற்போது விழா நடைபெற உள்ள இடத்தில் கால்பந்து பயிற்சி மைதானம் அமைக்க திட்டமிட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால் நிதி இல்லாததால் இடத்தைக்கூட சீரமைக்காமல் இருந்தனர். தற்போது அந்த இடம் சமதளமாக்கப்பட்டு விட்டதால், விழா முடிந்தவுடன் உடனடியாக அங்கு கால்பந்து பயிற்சி மைதானம் அமைத்துத்தர வேண்டும்.

மீதமுள்ள இடங்களில் 400 மீட்டர் ஓட்டப் பயிற்சிக்கான மண்தரை ஓடுதளம், 100 மீ நீளமுடைய சர்வதேச தரத்திலான நீச்சல்குளம் அமைத்துத் தர வேண்டும். அருகிலுள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தைச் சுற்றி வீரர்கள் தங்கும் அறைகளுடன்கூடிய பார்வையாளர்கள் மாடம் கட்ட வேண்டும்.

டிச.28-ம் தேதி இங்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டால் மகிழ்ச்சியடைவோம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x