Published : 16 Dec 2022 08:12 PM
Last Updated : 16 Dec 2022 08:12 PM
சென்னை: போக்சோ வழக்குகள் மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட குற்றங்களில் முறையான விசாரணைக்கு பின்பே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் முறையாக அமல்படுத்துவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் சிதம்பரம் நகர காவல் நிலைய நட்வடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், சிறார் குற்றங்களை கையாள்வது குறித்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் விவகாரத்தில் காவல் துறை செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு என்பவர் தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதிகள், "நீதிமன்ற உத்தரவின் பெயரில் தென் மாவட்டங்களில் போக்சோ வழக்குகள் மற்றும் சிறார் தொடர்புடைய குற்றங்களில் முறையான விசாரணை முடிந்த பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்ப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் போக்சோ மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைந்துள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு பாராட்டுகள்.
அதேபோன்று தமிழகம் முழுவதும் அமல்படுத்தலாம் என்று காவல் துறைக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர், குற்றச் சம்பவங்களில் சிறார்களை கையாள்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT