Published : 22 Jul 2014 08:39 AM
Last Updated : 22 Jul 2014 08:39 AM

‘தமிழ் வாரம்’ அறிவித்து நாடெங்கும் கொண்டாட வேண்டும்: மத்திய அரசுக்கு இல.கணேசன் வலியுறுத்தல்

தமிழ் புத்தாண்டு தொடங்கும் முதல் வாரத்தை ‘தமிழ் வாரமாக’அறிவித்து நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வலியுறுத் தியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி மதுரை கே.கே.நகரிலுள்ள அவரது சிலைக்கு இல.கணேசன் திங்கள்கிழமை மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மட்டும்தான் சினிமா கொட்டகைபோல கோயில்களில் பக்தர்களிடம் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் வருமானத்தை வசூலித் தாலே, பக்தர்களுக்கு இலவச தரிசனம் மட்டுமல்ல அன்னதானமே வழங்க முடியும். ஆனால் அந்த வருமானத்தை வசூலிப்பதில் அரசு திறமையைக் காட்டாமல் பக்தர்களிடம் பணம் வசூலித்து, ஏற்றத்தாழ்வு காட்டுவது பொருத்தமல்ல.

பிரதமர் ஆவதற்கு முன்பே நரேந்திர மோடிக்கு இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் நன்கு தெரியும். சுஷ்மா ஸ்வராஜ் அதைவிட அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார். நாங்களும் சொல்லி இருக்கிறோம். புதிய ஆட்சி வந்தபிறகு இலங்கை மீதான அணுகுமுறை, இலங்கை அரசுக்கு இந்தியா மீதுள்ள அணுகுமுறையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே எல்லாம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அரசு மத்தியில் இருக்கிறது. இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

இந்தியாவின் எல்லா மொழிகளுமே தேசிய மொழிகள்தான். சமஸ்கிருத வார விழா கொண்டாடுவதில் தவறில்லை. அதேசமயம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டையும் சமமாகப் பாவித்து நான் ஏற்கெனவே ஒரு வேண்டுகோளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளேன். ஏப்.14-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் அதாவது தமிழ் புத்தாண்டு தொடங்கும் முதல் வாரத்தை தமிழ் வாரமாக அறிவித்து, நாடு முழுவதும் விழா எடுக்க வேண்டும். தொடர்ந்து இதை வலியுறுத்துவேன்.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியமானது. அதேசமயம் மழைக் காலங்களில் பெருகிவரும் வெள்ளம் வீணாக கடலில் கலக்காமல் இருக்க, பல இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். நிரந்தர ஏற்பாடான நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு விட்டால் 365 நாளும் காவிரியில் தண்ணீர் ஓடும். இவ்வாறு இல. கணேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x