Published : 16 Dec 2022 05:58 PM
Last Updated : 16 Dec 2022 05:58 PM
கோவை: “பாஜகவில் வாரிசு அரசியல் இருப்பதாக அவதூறு பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் பேரனும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். தொடர்ந்து 54 ஆண்டுகள் ஓர் அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில் தான். வாரிசு அரசியலை சுட்டிக்காட்டினால், “வாரிசு அரசியல் பாஜகவில் இல்லையா?” என எதிர்கேள்வி கேட்கிறார்கள். மேம்போக்காக பார்த்தால் இக்கேள்வியில் நியாயம் இருப்பதுபோல தோன்றும். ஆனால், அதில் நியாயம் இல்லை.
குடும்பத்தில் தந்தையோ, தாயோ அரசியலில் இருந்தால், அவர்களது வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லை. நம் இந்தியா ஜனநாயக நாடு. 18 வயது பூர்த்தி அடைந்த, வாக்களிக்கும் தகுதி கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது. பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியின் தலைவராக வருவதுதான் வாரிசு அரசியல். காங்கிரஸில் வேறு ஒருவர் கட்சி தலைவராக இருந்தாலும், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் வழிநடத்துகிறார்கள்.
49 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும், ஸ்டாலின் தான் தலைவராக முடிந்தது. இதுதான் வாரிசு அரசியல். முடிவுகளை எடுக்கும், கட்சியை வழிநடத்தும் தலைமை பொறுப்பு, ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால், மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காது. திறமையான பலர் இருந்தும், எம்எல்ஏவாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி அமைச்சராகி விட்டார். பாஜகவில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசிய தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநில தலைமையிலும் வாரிசுகள் இல்லை.
தங்கள் மீதான வாரிசு அரசியல் விமர்சனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில், அனைத்து கட்சிகளிலும், பாஜகவிலும் வாரிசு அரசியல் இருப்பதாக அவதூறு பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். மகனை அமைச்சராக்கிய முதல்வர், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கியிருக்கலாம் அல்லது பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்காவது உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில், வருவாய் போன்ற முக்கிய துறைகளை கொடுத்திருக்கலாம். இனியாவது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கிய துறைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும்'' என்று வானதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT