Published : 16 Dec 2022 04:57 PM
Last Updated : 16 Dec 2022 04:57 PM

கோவையில் தொழிற்பூங்கா அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்: தமிழக அரசு

சென்னை: "கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்" என்று தமிழக அரசின் தொழிற்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிற்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, (அரசு ஆணை எண்.202, தொழில், மு.ஊ (ம) வர்த்தகத் (எம்.ஐ.இ.1) துறை, நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவையில் தொழிற்பூங்கா அமைக்க நிலங்களை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்து போராட்டங்களில் கலந்துகொண்டன.

கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய, திமுக எம்பி ஆ.ராசா, "தற்போதைய பேச்சுவார்த்தையின்படி, கம்பெனிக்குச் சொந்தமான நிலங்களை மட்டும் எடுத்து தொழிற்பூங்காவை தொடங்குவது. யாராவது சாகுபடி செய்யும் நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாமாக முன்வந்து கொடுத்தால் மட்டும் அதை கையகப்படுத்துவது. தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் கையகப்படுத்துவதில்லை என்பதில் தமிழக அரசு திட்டவட்டமாக உள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x