Published : 16 Dec 2022 03:01 PM
Last Updated : 16 Dec 2022 03:01 PM

"சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸில் தொழில்நுட்ப பிரச்சினை எப்படி வரும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி 

ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்படி தொழில்நுட்ப பிரச்சனை வரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவ வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பண்ணோக்கு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.16) நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த மார்ச் 21ம் தேதி கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

வரும் 2023 செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டிடத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மருத்துவமனை தயார் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4.89 ஏக்கர் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மூன்று இடங்களில் இருந்து பொதுமக்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் புதிய கட்டமைப்பை திறந்து வைக்க உள்ளார். இடைநிலை பராமரிப்பு மையம், 75 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை துவக்கி வைக்ககிறார்.

டிஎம்எஸ் வளாகத்தில் மனம் என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் துவக்கி வைக்கப்பட உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன குழப்பம், ஆலோசனைகளை வழங்க நட்புடன் உங்களோடு என்ற அமைப்பு துவங்கப்பட்டது. இதற்கு பொதுவான தொலைபேசி எண், மற்றும் விளக்க புத்தகத்தை 22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு தொழில்நுட்ப பிரச்சினைதான் காரணம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்படி தொழில்நுட்ப பிரச்சினை வரும். விரைவில் மத்திய அமைச்சரை டெல்லியில் சந்திக்கும் போது இது குறித்த விளக்கத்தை தெரிவிப்போம்.

நீட் தேர்வில் விலக்கு பெறுவது குறித்து தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நீட் விலக்கு குறித்து மத்திய சுகாதாரத்துறை கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதபடுத்தினாலும் தற்போது வரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. நம்பிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x