Published : 16 Dec 2022 02:32 PM
Last Updated : 16 Dec 2022 02:32 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகளால் அரசுக்கு என்ன ஆதாயம் என்பதை தெளிவுபடுத்த முதல்வர் ரங்கசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூட்டணி கட்சியான அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகள், ரெஸ்டோ பார்கள், டிஜே, ஸ்பா உள்ளிட்டவை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சகட்டமாக ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக தலைவர் புதிய மதுபான தொழிற்சாலைகள், புதிய மதுபான கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்ததுள்ளார். கூட்டணி கட்சியிலேயே அரசுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகள் வெளிவந்துள்ளதால், நல்லாட்சி நடத்துகின்ற அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசுக்கு திட்டமிட்டு அவப்பெயரை ஏற்படுத்த கூடிய இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை, கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்வர் ரங்கசாமி உடனியாக கூட்ட வேண்டும். புதுச்சேரி அரசு வருவாய் சம்பந்தமாக கலால் துறையை மட்டுமே நம்பியுள்ளது. நம் மாநில மதுபான தேவைக்காக அண்டை மாநிலங்களில் இருந்து சுமார் 900-க்கும் மேற்பட்ட மதுபான பிராண்டுகள் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மாநிலத்தின் அதிக வருவாய்க்காக புதிய மதுபான தொழிற்சாலைகள் தொடங்க புதுச்சேரியை தவிர்த்து அண்டை மாநிலத்தவர்களுக்கு அனுமதி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் இத்தொழிலை நடத்த அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் திமுகவை சேர்ந்த 3 நபர்கள் புதுச்சேரியில் டிஸ்லரி தொழில் தொடங்க அனுமதி பெற்றுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய மதுபான தொழிற்சாலையால் அரசுக்கு என்ன ஆதாயம், நஷ்டம் என்ன? சுற்றுச் சூழலுக்கு பாதிப்புள்ளதா? - இவை குறித்து தெளிவுபடுத்துவது அரசின் கடமை. எனவே, இது தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
புதுச்சேரியில் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பா, 85-க்கும் மேற்பட்ட இடங்களில் மசாஜ் சென்டர், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் டிஜே நாட்டியம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நபர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? இது மாதிரியான தொழில் மூலம் அரசுக்கு வருமானம் வருவது அவசியமா?
இப்பிரச்சனையில் ஒரு பெண்ணாக இருக்கிற துணைநிலை ஆளுநர் நேரடையாக தலையிட்டு புதுச்சேரி மாநிலத்துக்கு கலாச்சார சீரழிவு ஏற்படுத்தும் எந்த விதமான சட்டவிரோத செயல்களையும் அனுமதிக்க கூடாது. புதுச்சேரி மாநிலத்தின் எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் எந்த செயலையும் அரசு அனுமதிக்க கூடாது. இதை தடுக்க துணைநிலை ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிமுக தலைமை கழக அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும்" என்று அன்பழகன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT