Published : 16 Dec 2022 04:39 AM
Last Updated : 16 Dec 2022 04:39 AM

சேப்பாக்கம் உட்பட தமிழகம் முழுவதும் கூடுதலாக 11 மின் பகிர்மான கோட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் 11 புதிய மின் பகிர்மானக் கோட்டங்களை நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் இறையன்பு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி.

சென்னை: சென்னை சேப்பாக்கம் உட்பட தமிழகம் முழுவதும் 11 இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின் பகிர்மானக் கோட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) ஏற்கெனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் உள்ளது. அதிகபட்சமாக தாம்பரம் கோட்டத்தில் 6.79 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. குறைந்தபட்சமாக கூடலூர் கோட்டத்தில் 68,022 மின் இணைப்புகள் மட்டுமே உள்ளன.

எண்ணிக்கை வித்தியாசம் காரணமாக, அதிகாரிகள், ஊழியர்களின் பணிகளிலும் சமநிலை இல்லை. இதனால், பணிகளைச் சமநிலைப்படுத்தும் நோக்கில், மின் விநியோக நிர்வாக அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று 2021-22-ம் ஆண்டுக்கான எரிசக்தி துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோட்டங்களுக்கு இடையிலான மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்துவது, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அன்றாட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது, மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்வது, புகார்கள் மீது உடனடியாகத் தீர்வு காண்பது, அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதன்படி, ஏற்கெனவே உள்ள 176 மின் பகிர்மானக் கோட்டங்களுடன், கூடுதலாக சென்னை மாவட்டம் சேப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பென்னாகரம், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆகிய 11 இடங்களில் புதிதாக மின் பகிர்மானக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கோட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் இறையன்பு, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x