Published : 30 Dec 2016 11:36 AM
Last Updated : 30 Dec 2016 11:36 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாப் பகுதியாக விளங் கிய மணிமுத்தாறு அணைபூங்கா முறையான பராமரிப்பின்றி வீணடிக்கப்பட்டு விட்டது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்ப நேரிடுகிறது.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பது மணி முத்தாறு. அதன் குறுக்கே மணி முத்தாறு அணை கட்டப்பட் டுள்ளது. மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி யாகி கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் இடையே, தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
காமராஜரின் திட்டம்
களக்காடு மலைப் பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சை யாறின் பிறப்பிடத்திலிருந்து தனி யாகப்பிரியும் மணிமுத் தாறு, அருவியாக வந்து மணிமுத்தாறு அணைக்கட்டில் விழுகிறது. சாதாரண காலங்களில் இந்த நீரின் அளவை தாமிரபரணியுடன் ஒப்பிடும்போது அது மிகவும் குறைவுதான். எனவே, மழைக்கால வெள்ளநீரை வெளி யேற்றும் ஆறாகவே இருந்து வந்தது. மழைக்காலங்களில் வெள்ளநீர் தாமிரபரணியில் கலந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க 1958-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட திட்டமே மணிமுத்தாறு அணைக்கட்டு திட்டம்.
சிங்கம்பட்டி அருகே அமைக்கப் பட்டுள்ள இந்த அணை மூலம் சேமிக்கப்படும் நீர், திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகளான தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள் வழியாக மிகவும் வறட்சிப் பகுதிகளான திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.
பாசன பரப்பளவு
மொத்தம் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையிலிருந்து புறப்படும் பெருங்கால் வாய்க்கால் மூலம் 2,589 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்களும், நாங்குநேரி, சாத்தான் குளம் தாலுகாவில் புதிய 22,852 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் வகையில் மணிமுத்தாறு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப் பட்டது.
சிறப்பு நிலை பேரூராட்சி
அணை அமைக்கும்போதே அதையொட்டி 3 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டது. அணைக் கட்டும், அருவியும் நல்ல சுற்றுலாத் தலங்களாக திகழ்கின்றன. மேலும் தமிழ்நாடு காவல்துறையின் இரண்டு காவலர் பயிற்சி பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன. பொது மக்கள் இங்கு குறைவாகவே வாழ் கின்றனர். மலை பகுதியானப் மாஞ்சோலை மற்றும் கோதையா றுக்கு மணிமுத்தாறே நுழை வாயில் என்பதால் மணிமுத்தாறு, மாஞ்சோலை, கோதையாறு பகுதி களை இணைத்து மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சி அமைக்கப் பட்டுள்ளது.
( நடமாட முடியாத அளவுக்கு புதர் மண்டிய பூங்காவில் மண்ணோடு, மண்ணாகி விட்ட இருக்கைகள்.)
வீணடிக்கப்பட்ட பூங்கா
திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ. தூரத்தில் மணிமுத்தாறு அணைப்பகுதி உள்ளது. இதை யொட்டி அமைக்கப்பட்ட பூங்கா தொடக்கத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் வண்ண மலர் செடிகள், மரங்கள், அலங்கார நீரூற்றுகள், மின் விளக்கு அலங்காரங்கள், வன விலங்குகள் கூடம் போன்ற கட்டமைப்புகளுடன் இருந்தது. மழைக் காலங்களில் 118 அடி உச்சநீ்ர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நிரம்பி வழிந்து இந்த பூங்கா வழியாக பாய்ந்தோடுவதை காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக பூங்காவை பராமரிக்கத் தவறியதால் நாளடைவில் பூங்கா பாழடைந்து வந்தது. தற்போது பூங்காவில் செடி, கொடிகள் புதராக வளர்ந்து, பொலிவிழந்து காணப்படுகிறது.
எல்லாமே பாழ்
குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் உடைந்து கிடக்கின்றன. சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் அறைகளுக்குள் புதர் மண்டியுள்ளது. காட்சி கோபுரங்களுக்கு செல்லும் படிக்கட்டுகள் உடைந்துள்ளன. பூங்காவுக்குள் நடமாட முடியாத அளவுக்கு சிமெண்ட் பாதைகள் உடைந்துள்ளன. செயற்கை தாமரைக் குளங்கள், அவற்றுக்கு அணையில் இருந்து வரும் அழகிய தண்ணீர் கால்வாய்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மான்கள், மலைப்பாம்பு போன்றவை வைக்கப்பட்டிருந்த கூண்டுகளும் சேதமடைந்துள்ளன. அழகிய செயற்கை நீரூற்றுகள் பயன்படுத்த முடியாமல் போய்விட்டன.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மாலை 6 மணிக்கெல்லாம் இங்கு அலங்கார மின் விளக்குகள் ஒளிர விடப்படும். இதைக்காண ஏராளமானோர் திரள்வர். அவையெல்லாம் இப் போது பழங்கதையாகி விட்டன.
சாலை படுமோசம்
அத்துடன் இந்த பூங்காவுக்கு செல்லும் சாலையும் ஆங்காங்கே பொத்தல் விழுந்து மிகவும் சேத மடைந்து காணப்படுகிறது. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டி லுள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணி கள் வலியுறுத்தியும் சாலை சீரமைக் கப்படாமல் உள்ளது. இதனால் விபத்துகளும் நேரிட்டு வருகின்றன. அதே நேரத்தில் மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் சிறப்பு படை அமைந்துள்ள இடத்தில் சாலைகள் பராமரிப்பு செய்யப்படுகின்றன. மணிமுத்தாறுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மணிமுத்தாறு அணை வரை செல்வதில்லை. சாலை சரியில்லாததும் இதற்கு காரணம். பேச்சியம்மன் கோயிலில் இறங்கி அடுத்து 2 கி.மீ தூரத்துக்கு நடந்து சென்றால்தான் அணையை அடைய முடியும். எனவே சாலையை சரி செய்து, பூங்காவையும் முறையாக பராமரித்து அங்கு அடிப்படை வசதிகளையும் உருவாக்கினால் நெல்லை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலம் மீண்டும் உயிர் பெறும்.
நிதி ஒதுக்கியும் பயனில்லை
தற்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சி நிலவும் நிலையில் மணிமுத்தாறு அணையிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த அணை நீர்மட்டம் நேற்று காலையில் 36.50 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் தண்ணீர் குளம்போல் காட்சியளிக்கிறது. வெளியே பூங்காவும் வறண்டு பொலிவிழந்துவிட்டது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், இப்பகுதி மக்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூறும்போது, ``பூங்காவை சீரமைக்க அவ்வப்போது நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பூங்கா பாழடைந்துவிட்டது. மேலும் இப் பூங்காவுக்கு செல்லும் சாலையும் மிக மோசமாக சேதமடைந்திருக்கிறது. பூங்காவை புனரமைக்கவும், சாலைகளை தரமாக அமைக்கவும் அரசுத்துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT