Published : 16 Dec 2022 06:26 AM
Last Updated : 16 Dec 2022 06:26 AM

காஞ்சிபுரம் அருகே கோயிலை காணவில்லை: பொன்.மாணிக்கவேல் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்துக்கு நேற்று வந்த ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்,“காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த கிபி. 1071-ம் வருட பழமையான நின்று அருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை” என்று புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் கோயில் களவாடப்பட்டு நம் மண்ணில் இருந்தே காணாமல் போயுள்ளது. பரந்தகத் தேவர் என்ற சோழர்காலத்தில் 1071-ம் ஆண்டு கட்டப்பட்ட நின்று அருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வழிபாட்டில் இருந்துள்ளது. பின்னர் கோயில் சீரமைப்பு என்ற பெயரில் அந்தக் கோயில் முற்றிலும் களவாடப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் தொடர்பான கல்வெட்டு 1906-ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களால் (115 வருடத்துக்கு முன்னால்) கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சீரமைப்பு என்ற பெயரில் இந்தக் கோயிலில் இருந்த கல்வெட்டு, சிலைகள் அனைத்தும் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதன் பிறகு திரும்பி வரவில்லை என்று 80 முதல் 90 வயதுடைய பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பணி என்ற பெயரில் கோயில் களவாடப்பட்டதை அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு தெரிவிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி மற்றும் டிஜிபி அளவிலான அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x