Published : 16 Dec 2022 04:15 AM
Last Updated : 16 Dec 2022 04:15 AM
வேலூர்: தமிழக - ஆந்திர எல்லையில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் நேற்று 6 ஆயிரம் கன அடி அளவுக்கு வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட மேன்டூஸ் புயல் தாக்கத்தால் வட தமிழகத்தில் கன மழை பெய்த நிலையில், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பரவலான கனமழையும் பெய்தது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாலாற்றுக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. பாலாற்றில் நேற்று முன்தினம் 3 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை அது 4 ஆயிரம் கன அடியாகவும், பிற்பகலில் 6 ஆயிரம் கன அடியாகவும் திடீரென அதிகரித்தது.
இதில், புல்லூர் தடுப்பணையில் இருந்து அதிகபட்சமாக 4,980 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி மண்ணாற்றில் இருந்து 300, கல்லாற்றில் இருந்து 100, மலட்டாற்றில் இருந்து 950, அகரம் ஆற்றில் இருந்து 425 கன அடி வீதம் பாலாற்றுக்கு வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. கவுன்டன்யா ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கு 700 கன அடிக்கு நீர்வரத்து இருக்கும் நிலையில் கொட்டாற்றில் இருந்து 50 கன அடி தண்ணீர் கவுன்டன்யா ஆற்றில் தட்டப்பாறை அருகே கலக்கிறது. இதன் மூலம் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 750 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கு நீர்வரத்து இருப்பதால் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் 30 கனஅடிக்கு வெளியேறி பாலாற்றில் கலக்கிறது. ஆம்பூர் அருகேயுள்ள வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து பாலாற்றுக்கு மொத்தம் 55 கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உற்பத்தியாகும் நீவா நதி என்ற பொன்னையாற்றில் நேற்று 1,150 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. ஆந்திர மாநில எல்லையில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் நீர்வரத்து அதிகரித்தது.
பாலாற்றில் நேற்று திடீரென அதிகரித்த வெள்ளப்பெருக்கால் செதுவாலை ஏரிக்கு 110 கன அடிக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால், ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பாலாற்றில் 6 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து இருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
பாலாறு அணைக்கட்டில் இருந்து 130 கனடி தண்ணீர் கால்வாய் மூலம் காவேரிப்பாக்கம் ஏரிக்கு திருப்பிவிட்டுள்ளனர். இதற்கிடையில், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து சென்றதை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT