Published : 15 Dec 2022 07:43 PM
Last Updated : 15 Dec 2022 07:43 PM
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியிடம் செல்போன் இருந்து, அதை ஒப்படைக்கவில்லை என்றால், மாணவியின் பெற்ரோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனு தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் காவல் துறையின் விசாரணை முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவர்களின் அறிக்கை ஆகியவை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனது மகள் செல்போன் வைத்திருக்கவில்லை எனவும், விடுதி காப்பாளரின் செல்போனில் இருந்தே பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? செல்போனை ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பினார். மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பில், அதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் சட்டப்படி குற்றம், அதற்காக விசாரிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். செல்போன் இருந்தால் உடனடியாக அதனை ஒப்படைக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT