Published : 15 Dec 2022 05:15 PM
Last Updated : 15 Dec 2022 05:15 PM
புதுடெல்லி: மதுரை விமான நிலையத்திற்கு மத்திய பாதுகாப்பு படையான சிஐஎஸ்எஃப் வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ளது. இதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலாகத் தெரிவித்தார்.
இது குறித்து மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் தனது கேள்வியில், ''மதுரை விமான நிலையத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை போதாமையால் கூடுதல் விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் வெளி நாடுகளுக்கான விமானங்கள் மதுரைக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு விமான நிலையங்களுக்கு சென்று விடுகின்றன. ஆகவே, சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் கூடுதலாக மூன்றாவது பணி நேரத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டும்.
நீண்டநாட்களாக எழுப்பி வரும் இந்தக் கோரிக்கையை நானும், தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை தொழில் வர்த்தக சபையினரும் முன் வைத்து வருகிறோம். மதுரையை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறோம்'' எனக் கேட்டிருந்தார்.
இதற்கான பதிலில் மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவிக்கையில், ''இப்போதைக்கு இந்திய தொழில் பாதுகாப்பு படை எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தேசம் இல்லை. மொத்த பணியிடங்கள் 268, அவற்றில் நிரப்பப்பட்டு இருப்பது 263. விமானங்கள் காலை 7.15 லிருந்து இரவு 8 மணி வரைதான் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானங்கள் இந்த நேரத்தை கடந்து இயக்கப்பட்டால் கூடுதல் தொழில் பாதுகாப்பு படை வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் கூறும்போது, ''அமைச்சரின் பதில் தலைகீழாக இருக்கிறது. இரவு விமானங்கள் இல்லையே என்றால் இந்திய தொழில் பாதுகாப்பு படை போதவில்லை என்பதும், தொழில் பாதுகாப்புப் படையை கூடுதலாக கேட்டால் கூடுதல் விமானங்கள் வந்தால் தருகிறோம் எனக் கூறுகிறது. இது, போகாத ஊருக்கு வழி சொல்வது போல இருக்கிறது. மத்திய, தென் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கு பயன் அளித்து வரும் மதுரை விமான நிலையம் சம்பந்தப்பட்ட இக்கோரிக்கை இப்படி தொடர்ந்து புறம் தள்ளப்படுகிறது.
இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மதுரை தூத்துக்குடி தொழில் வளப் பாதையும் வலுப்பெறும். தமிழகத்திற்கு ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தின் நீட்சியாகவே இந்த கோரிக்கையை ஏற்க மறுப்பதும் உள்ளது. ஆனால் மதுரை வளர்ச்சிக்கான எங்கள் குரல் ஓயாமல் ஒலிக்கும். மதுரை மக்களின் கருத்தையும் திரட்டி ஒன்றிய அரசை நிச்சயம் ஏற்க வைப்போம்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT