Published : 15 Dec 2022 04:43 PM
Last Updated : 15 Dec 2022 04:43 PM
கும்பகோணம்: “2024-ல் நடைபெறும் பொதுத் தேர்தலில் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” என்று இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் 75-ஆம் ஆண்டு பவள விழா வரும் 20-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளோம். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். இந்தியாவில் உள்ள அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் மாநாடாக நடைபெற இருப்பதால் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சியாக தொடர்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதுணையாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது முறையாக முதல்வரான பிறகு தனது மகன் மு.க.ஸ்டாலினை அமைச்சராக்கினார். ஆனால், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளிலேயே தனது மகன் உதயநிதி ஸ்டாலினை பொறுப்பு மிக்க அமைச்சராகி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஓர் இளைஞர். நல்ல சிந்தனை உடையவர். அனைவரிடமும் நெருக்கமாக பழகக் கூடியவர். தமிழக அரசியலில் நல்ல எதிர்காலத்திற்கு தொடக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஜி -20 மாநாடு இந்திய தலைமை ஏற்ககிறது என்பது இந்தியாவுக்கு என தனி பெருமை ஆகும். இதன்மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறோம். இந்த மாநாடு மூலம் இந்தியாவுக்கு பேரும் புகழும் கிடைக்கும்.
2024-ஆம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் உள்ள அனைத்து சமூக நீதியை ஏற்றுக்கொண்ட கட்சிகள், மதவாதத்தை புறந்தள்ளுகின்ற கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். சீன நாட்டின் பிரச்சினையில் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்பியதை பார்க்கும்போது, வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வாய்ப்புள்ளது. அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது.
நம் இந்திய நாட்டின் பிரதமர் சிறந்த தலைவராகத்தான் இருக்க முடியும். அனைவரும் விரும்பிதான் மோடியை பிரதமர் ஆக்கியுள்ளோம். அவரது கொள்கையில் சில மாறுபாடுகள் இருக்கும். அதனை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவது இயற்கை தான். ஜி-20 மாநாட்டில் மோடியை முன்னிலைப்படுத்திதான் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை, மோடியின் காலத்தில்தான் வந்தது. பிரதமர் மோடியை நாட்டு மக்கள் சிறந்தவர் என்று கூறுவதற்கு நான் உடன்படத்தான் செய்கிறேன்.
வரும் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் நடைபெறும் மாநாட்டின்போது முடிவெடுப்போம். இதேபோல் பாஜக மற்றும் அதனுடன் சார்ந்த கட்சியுடன் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவதற்கு நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வரும் தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment