Published : 15 Dec 2022 02:58 PM
Last Updated : 15 Dec 2022 02:58 PM
காரைக்கால்: பெண்கள் பல்வேறு துறைகளில், தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர் என புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஏகே சாய் ஜெ.சரவணன் குமார் கூறியுள்ளார்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, பெண்களுக்கான "காரைக்கால் அம்மையார் பாலின வள மையம்" திறப்பு நிகழ்ச்சி இன்று (டிச.15) நடைபெற்றது.
இதில் அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பாலின வள மையத்தை திறந்து வைத்துப் பேசியது: "நம் நாடு பெண்களை பெருமைப்படுத்தும் நாடாக உள்ளது. பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை பிரதமர் ஊக்குவித்து வருகிறார்.
புதுச்சேரியில் தீயணைப்புத் துறையில் 30 சதவீதம் பெண்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்கள் வல்லமையையும், திறமைகளையும் நிரூபித்து வருகின்றனர். பெண்கள் எதிர் கொள்ளக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகள், ஆலோசனைகள், சட்ட உதவிகள், கவுன்சிலிங் உள்ளிட்டவை இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும்." என்று அமைச்சர் கூறினார்.
புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பங்கேற்றுப் பேசியது: "இந்த மையத்தை பெயரளவுக்கு அல்லாமல், உளவியல் படித்த வல்லுநர் உள்ளிட்டோரை நியமித்து, பிரச்சினைகளோடு வரக்கூடிய பெண்களின் இடர்பாடுகளை பொறுமையாகக் கேட்டறிந்து தேவையான உதவிகளை, ஆலோசனைகளை வழங்க வேண்டும். பெண்கள் தங்கள் உரிமைகளையும், சுய மரியாதையையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்த தயங்கக் கூடாது.
தாழ்வு மனப்பான்மையை கைவிட்டு முதலில் பெண்கள் தங்களை தாங்களே மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்." என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.1 கோடியே 79 லட்சம் நிதி உதவிகளை அமைச்சர் சாய் சரவணன் குமார் வழங்கினார். காரைக்கால் தெற்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினர் ஏஎம்எச் நாஜிம், ஊரக வளர்ச்சித் துறை திட்ட செயலாக்க அதிகாரி ஜி.ஜான்சன், திட்ட இணைப்பு அதிகாரி லட்சுமணன், வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரி நாதன், சுய உதவிக் குழு பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT