Published : 15 Dec 2022 07:23 AM
Last Updated : 15 Dec 2022 07:23 AM

கோயில் நிதியில் முறைகேடு செய்வதாக வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோயில்களில் பெரும்பாலான கோயில்களுக்கு இன்னும் அறங்காவலர்களை நியமிக்காத நிலையில், மறைமுகமாக கோயில் நிதியில் முறைகேடுகள் செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் அமைப்பின் தலைவரான டி.ஆர்.ரமேஷ், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உப கோயில்களுடன் சேர்த்து மொத்தம்44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் 38 ஆயிரம் கோயில்கள் அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் சுமார் 19 ஆயிரம் கோயில்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரை அல்லாத அறங்காவலர்களை தமிழக அரசு இதுவரை நியமிக்கவில்லை.

இந்நிலையில், அறநிலையத் துறையின் செயல் அலுவலர்கள் மூலமாக கோயில் நிர்வாகத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு, கோயில் நிதியை சமயம், ஆன்மிகம் அல்லாத பிற பணிகளுக்கு தமிழக அரசு மறைமுகமாக இஷ்டம்போல செலவிட்டு வருகிறது. குறிப்பாக கோயில்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகள், அறநிலையத் துறை ஊழியர்களின் சம்பளம்உள்ளிட்ட பிற செலவினங்களுக்காக மாற்றிவிடப்பட்டுள்ளது.

நிர்வாகத்தில் குளறுபடிகள்: அறங்காவலர்கள் நியமனம் பல ஆண்டுகளாக நடைபெறாததால் கோயில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகள் முறைகேடுகள் செய்துள்ளனர். கோயில்களின் நிர்வாகத்திலும் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகதொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் 628 செயல் அலுவலர்களை பதவி நீக்கம் செய்து, கோயில்களுக்கு உடனடியாக அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் ஆஜராகி, ‘‘தமிழகத்தில்உள்ள பெரும்பாலான கோயில்களில் கடந்த 2011 முதல் இதுவரைஅறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அந்த கோயில்களை செயல் அலுவலர்கள் மூலமாக அறநிலையத் துறையே நிர்வகித்து வருகிறது. இது சட்டவிரோதம்.

அறங்காவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மட்டுமே நிர்வாக அதிகாரியை நியமிக்க முடியும். அந்த நியமனமும், நிர்வாகம் சீரான நிலைமைக்கு வரும்வரை மட்டுமே இருக்க வேண்டும். அதன்பிறகு கோயில் நிர்வாகங்கள் முழுமையாக அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் நிலைமைதலைகீழாக உள்ளது. கடந்த 70ஆண்டுகளில் தமிழகத்தில் அறநிலையத் துறையால் கைப்பற்றப்பட்ட கோயில் நிர்வாகங்கள், அறங்காவலர்களிடமோ, சம்பந்தப்பட்ட சமூகத்திடமோ திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக எந்த பதிவுகளும் இல்லை. இதன்மூலம் மிகப்பெரியஅளவில் முறைகேடுகள் நடந்து வருகின்றன” என்று வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் குறுக்கிட்டு, “கடந்த 2011 முதல் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லையா?” என்று கேள்விஎழுப்பினார். பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x