Published : 15 Dec 2022 05:52 AM
Last Updated : 15 Dec 2022 05:52 AM
சென்னை: அப்துல் கலாம் வழியில் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள், மாணவர்கள் பங்களிப்பாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை தொழில்நுட்ப கல்லூரியின் (எம்ஐடி) முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முழு உருவ சிலை, குரோம்பேட்டையில் உள்ளகல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாநேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி,அப்துல் கலாம் சிலையை திறந்துவைத்தார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவர்களுக்கு கல்லூரி சார்பிலானஉதவித் தொகையையும் அவர் வழங்கினார்.
விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அப்துல் கலாமின் பங்களிப்பு போற்றத்தக்கது. நவீன இந்தியாவை உருவாக்க பாடுபட்ட அப்துல் கலாம், எளிய குடும்பத்தில் இருந்து வந்து பெரிய சாதனை புரிந்துள்ளார். தன் இறுதி மூச்சு வரை நாட்டுக்காக வாழ்ந்த கலாமைமுன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் சாதிக்க வேண்டும்.
வரும் 2047-ம் ஆண்டு இந்தியா உலகுக்கு தலைமை வகிக்கக்கூடிய பொறுப்பில் இருக்க போகிறது. அப்துல் கலாம் வழியில் இளைஞர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். வெற்றி பெற்ற இளைஞர்கள், கிராமங்களில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு ஊக்கமளித்து திறன் கொண்டவர்களாக மாறவழிகாட்டி ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ட்ரோன் கண்காட்சி அரங்குகளை ஆளுநர் ரவி பார்வையிட்டு, அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜி.ரவிக்குமார், எம்ஐடி கல்லூரி முதல்வர் ஜெ.பிரகாஷ், பேராசிரியர் பி.செந்தில்நாதன் மற்றும் கலாம் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT