Published : 15 Dec 2022 06:38 AM
Last Updated : 15 Dec 2022 06:38 AM

பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு குறைப்பு: நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை

திருவள்ளூர்/ காஞ்சிபுரம்: நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. இதனால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேன்டூஸ் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் பெய்த மழை தற்போது சற்று ஓய்ந்துள்ளது. இந்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 9-ம் தேதி முதல், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன்படி, பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 7500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால், நேற்று காலை 9 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வளத் துறை அதிகாரிகள் குறைத்தனர். இதன்படி நேற்று காலை 6 மணி நிலவரப்படி 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவும் 35 அடி உயரமும் கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2,854 மில்லியன் கனஅடியாகவும் நீர்மட்டம் 34.10 அடியாகவும் உள்ளது.

அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த 12-ம் தேதி காலை முதல் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, மாலை 4.30 மணி முதல் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியது. ஆகவே, காலை 9.30 மணி முதல், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால், நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 3,228 மில்லியன் கனஅடி நீர்இருப்பும் 22.42 அடி நீர்மட்டமும் உள்ளது.

மேலும், புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடியும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x