Published : 14 Dec 2022 09:22 PM
Last Updated : 14 Dec 2022 09:22 PM

கோவை அன்னூரில் அனுமதியின்றி விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தாது: ஆ.ராசா திட்டவட்டம்

ஆ.ராசா | கோப்புப்படம்

கோவை: "கோவை அன்னூரில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் கையகப்படுத்துவதில்லை என்பதில் தமிழக அரசு திட்டவட்டமாக உள்ளது" என்று திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கோவையில் டிட்கோ சார்பில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த ஓர் அரசாணை வெளியிடப்பட்டு அதன்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது தொழிற்பூங்கா அமையவுள்ள பகுதிகளில் உள்ள சில விவசாயிகள், நிலம் எடுக்கக்கூடாது எனக்கூறி போராட்டத்தை அறிவித்து அங்குள்ள மக்களிடம் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து போராட்டத்தையும் நடத்தி முடித்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கோவையில் வரக்கூடிய நிறுவனம் சிப்காட் அல்ல டிட்கோ. இங்கு தொழிற்சாலை அமைக்கவுள்ள எந்த நிறுவனங்களும் மாசு வெளியேற்றுகிற நிறுவனங்கள் அல்ல. அந்நிறுவனங்கள் மாசு வெளியேற்றும் நிறுவனங்களா இல்லையா என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். மத்திய அரசில் இருக்கின்ற பாஜக அரசாங்கம் எந்தவித தவறையும் அனுமதிக்காது என்கிற அரசியல் தைரியம் பலருக்கு இருக்க வேண்டும், இருக்கும்.

சம்பந்தப்பட்ட இடத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கம்பெனிக்குச் சொந்தமான நிலங்கள் இருக்கிறது. அவை தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் இல்லை. அந்த நிலங்கள் எல்லாம் விளைநிலங்களோ, சாகுபடி நிலங்களோ இல்லை. அந்த கம்பெனியிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை. அந்த கம்பெனி நிலங்களின் இடையில் இருக்கிற விவசாய நிலங்களை எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் குறிப்பிட்ட சில விவசாயிகள் இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருடன் நடத்திய போச்சுவார்த்தையில், இந்தப் பகுதியில் இருக்கின்ற மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக தெளிவான முடிவு எடுத்துள்ளனர். இன்று இரவோ, நாளையோ நல்ல முடிவு வெளியாகும். ஆனால், சிலர் இந்த விவகாரம் குறித்து வதந்தியைப் பரப்புகிறார்கள்.

தற்போதைய பேச்சுவார்த்தையின்படி, கம்பெனிக்குச் சொந்தமான நிலங்களை மட்டும் எடுத்து தொழிற்பூங்காவை தொடங்குவது. யாராவது சாகுபடி செய்யும் நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாமாக முன்வந்து கொடுத்தால் மட்டும் அதை கையகப்படுத்துவது. தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் கையகப்படுத்துவதில்லை என்பதில் தமிழக அரசு திட்டவட்டமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

கோவை அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்து போராட்டங்களில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x