Published : 14 Dec 2022 06:57 PM
Last Updated : 14 Dec 2022 06:57 PM

விதிமீறல் கட்டடங்கள் |  ஈஷா அறக்கட்டளைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது ஐகோர்ட்

கோப்புப்படம்

சென்னை: சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா அறக்கட்டளை தரப்பில், "உடல், மனம், நன்னெறியை மேம்படுத்தம் நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களாகவே கருத வேண்டும். எனவே, ஈஷா அறக்கட்டளை கட்டுமானத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை" என வாதிடப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில், “கல்வி போதிக்கும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு பெற முடியும். எனவே, ஈஷா அறக்கட்டளையும் விலக்கு கோர முடியும்" என வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில், "ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா? இல்லையா? என்பதே தற்போது வரை சர்ச்சைக்குரிய கேள்வியாக உள்ளது. 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் உள்ள ஈஷா அறக்கட்டளை வளாகத்தில், 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே யோகா மையம் செயல்படுகிறது. எனவே அதை மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம்" என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "கட்டுமானம் அமைந்துள்ள மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தில் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளது. யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும்” எனக் கூறி, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x