Published : 14 Dec 2022 06:41 PM
Last Updated : 14 Dec 2022 06:41 PM

தாமதமாகும் சிகிச்சைகள், புலம்பும் மருத்துவர்கள்... - தமிழகத்தில் ‘முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்’ சொதப்புவது எப்படி?

கோப்புப் படம்

சென்னை: மருத்துவமனைகளுக்கு வசதிகள் தேவை என்றால் காப்பீட்டுத் திட்ட வருமானத்தை பெருக்கி, அதன் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளாதாகவும், இதன் காரணமாக மருத்துவர்கள் டேட்டா என்ட்ரி பணி மட்டுமே பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டு திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்டுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டு திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகள், 8 தொடர் சிகிச்சைகள் மற்றும் 52 பரிசோதனை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிதாக நீட்டிக்கப்பட்ட முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் தற்போது 800 அரசு மருத்துவமனைகள் மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பம் ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்நிலையில், பொதுமக்கள் நல்ல மருத்துவ சேவை பெற கொண்டு வரப்பட்ட காப்பீட்டு திட்டம் இப்போது மக்களுக்கு பயன்படும் நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை தேவைகளுக்கு காப்பீட்டு தொகை: இது குறித்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையின் தேவைகளுக்கு நிதி தேவை என்றால் காப்பீட்டு திட்டம் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்ளுங்கள் என்று அரசு கூறுகிறது. ஆனால், காப்பீட்டுத் திட்டத்தின் நிலை மிகவும் மேசமாக உள்ளது. ஒரு மருத்துவமனையில் 10 சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் ஒப்புதல் கேட்டால் 5-க்கு மட்டும் தான் தருகிறார்கள்.மீதம் உள்ள 5-க்கு தருவது இல்லை. இப்படி இருந்தால் நிதி எப்படி கிடைக்கும். மருத்துவம் பார்க்கும் நிலையில் இருந்து வருமானம் கிடைக்க வழியை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அரசு எங்களை தள்ளி உள்ளது" என்றார்.

நிதியைப் பெறுவதில் சிக்கல்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், "ஒரு அறுவை சிகிச்சை செய்ய ரூ.10,000 ஆகும் என்றால் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.8,000 தான் அளிக்கும். இப்படி எல்லா அறுவை சிகிச்சைகளுக்கும் குறைவான தொகை தான் அளிப்பார்கள். மேலும், ஒரு சில அறுவை சிகிச்சைகளுக்கு ஒரு ரூபாய் கூட அளிப்பது இல்லை. ஏற்கெனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கும் குறைவான தொகைதான் கிடைக்கிறது. இப்படி தொகையை வாங்குவதில் பல சிக்கல் இருக்கும்போது எப்படி மருத்துவமனை தேவைகளுக்கு நிதி கிடைக்கும்" என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை 1,09,23,539 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களுக்கு 10,203 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 3,368 கோடி மட்டும் அரசு பொது மருத்துவமனைகளுக்கு கிடைத்துள்ளது. 6862 கோடி ரூபாய் தனியார் மருத்துவமனைகளுக்கு தான் கிடைத்துள்ளது.

டேட்டா என்டரி பணி: இந்தக் குறைந்த தொகையை பெறுவதற்கு கூட அரசு மருத்துவமனைகள் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றார் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவர். அவர் தொடர்ந்து கூறுகையில், "அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அனுமதி வாங்க வேண்டும். இதற்கு பல ஆவணங்களை தயார் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை சம்பந்தபட்ட அறுவை சிகிச்சை மருத்துவர்கள்தான் செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சையுடன் சேர்த்து டேட்டா என்ட்ரி பணிகளையும் செய்தால்தான் எங்களுக்கு குறைந்தபட்ச தொகையாவது கிடைக்கிறது" என்றார்.

காப்பீட்டு திட்டத்தை நிறுத்த வேண்டும்: இப்படி பல சிக்கல்களை உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், காப்பீட்டு திட்டத்திற்கு அரசு அளிக்கும் தொகையில் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்களை வழங்கினால் எந்தவித தாதமமும் இன்றி அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x