Published : 28 Dec 2016 11:20 AM
Last Updated : 28 Dec 2016 11:20 AM

பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா? - அதிமுக வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதங்கள்

'தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்'

அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் பதவியை தேர்தல் மூலமே நிரப்ப முடியும் என்பதால் சென்னையில் 29-ம் தேதி நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில், சசி கலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நாளை (29-ம் தேதி) நடக்கிறது. இதில் சசிகலா பொதுச்செயலாளராக அறிவிக்கப் படுவார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளரை முடிவு செய்து அறி விக்க முடியாது என்பதே அதிமுக மூத்த நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து அதிமுக வட்டாரங் கள் கூறியதாவது: அதிமுக பொதுக் குழுக் கூட்டம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். அப்போது, கட்சியின் வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். மேலும், பொதுச்செயலாளர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல், இதர உறுப்பினர்களின் வேண்டு கோளுக்கு இணங்க தீர்மானங் களும் நிறைவேற்றப்படும்.

அதிமுக விதிமுறைகளின்படி, பொதுச்செயலாளர் பதவி என்பது தொண்டர்களால் தேர்வு செய்யப் படும் பதவி. இப்பதவிக்கான தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அதிகாரியாக ஒருவரை கட்சித் தலைமை நியமிக்கும்.

போட்டி இல்லை என்றால், யாருக்காக மனு செய்யப்பட்டுள் ளதோ அவர் பொதுச் செயலாளராக அறிவிக்கப்படுவார். தேர்தல் நடைமுறைகள், போட்டியின்றி பொதுச்செயலாளர் தேர்வு உள் ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணை யத்துக்கு அளிக்கப்படும். அதன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் வேட்பாளரை அறிவிக்கவும் அவருக்கு கட்சிச் சின்னத்தை வழங்கவும் பொதுச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கும்.

நிலைமை இப்படி இருக்க தீர் மானம் நிறைவேற்றி சசிகலாவிடம் கொடுப்பதன் மூலமோ, பொதுக்குழுவைக் கூட்டுவது மூலமோ அவர் பொதுச்செயலாளர் பதவியை பெற முடியாது. கடந்த காலங்களில் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக யாரும் போட்டியிட முயற்சி செய்யவில்லை. ஆனாலும், தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பலரும் ஜெயலலிதா பெயரிலேயே மனு செய்தனர். அதன்படி, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், தற்போதைய நிலை யில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. மனுவை பெற மறுத்தால் நீதிமன்றம் மூலம் தேர்தல் நடத்த அதிருப்தியாளர்கள் முயற்சி எடுப்பர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பொதுக்குழுவில் என்ன நடக்கும் என்பது குறித்து, எம்ஜிஆர், ஜெய லலிதா தலைமையிலான அமைச்ச ரவையில் பங்கேற்ற, அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் உள் ளிட்ட பல்வேறு பதவிகளை வகித் துள்ள மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அதிமுகவின் பொதுசெயலாளரை பொது உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என கட்சி தொடங்கியபோது ஒரு விதியை (விதி 20 - பிரிவு 2) எம்ஜிஆர் கொண்டு வந்தார்.

தற்போதைய சூழலில் பொதுக் குழுவில், தேர்வு முறையை மாற்றி, பொதுச்செயலாளரை பொதுக் குழுவே தேர்வு செய்யலாம் என திருத்தம் கொண்டு வரலாம்.

இல்லாவிட்டால், துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, அவருக்கு கட்சியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கி தீர்மானம் நிறைவேற்றலாம். இவ் வாறு நியமிக்கப்படுபவர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடலாம்.

எம்ஜிஆர் இறந்தபோது துணைப் பொதுச்செயலாளராக இருந்த ராகவானந்தம், பொதுச்செயலாள ருக்கான பணியை மேற்கொண்டார். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது, ஆர்.எம்.வீரப்ப னுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திருநாவுக் கரசர், சு.முத்துசாமி, செங்கோட்டை யன் என பல துணைப் பொதுச் செயலாளர்களும் நியமிக்கப்பட்ட னர். திருநாவுக்கரசர் கட்சியை விட்டு வெளியேறிய பிறகு துணைப் பொதுசெயலாளர் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை.

அதிமுகவில் பொதுச்செயலா ளர் பதவிக்கு போட்டியிட தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். கடந்த 2011-ல் சசிகலா நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார். அப்போது, சசிகலாவின் விளக்கத்தை ஏற்று மீண்டும் ஜெயலலிதா கட்சியில் அவரை சேர்த்தபோது, ‘சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது’ என்றுதான் தெரிவித்துள்ளார். இதனால், சசிகலா உறுப்பினராக நீடிக்கிறார் என்பதால் அவருக்கு பாதிப்பு இல்லை. அப்படியே இருந்தாலும் கட்சி விதிகள் திருத்தப்படும் வாய்ப்புள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.அரங்க நாயகம் கூறும்போது, “அதிமுக வில் தேர்தலை அறிவிக்க பொதுச் செயலாளர் வேண்டும். எனவே, தற்காலிக பொதுச்செயலாளராக ஒருவர் பொதுக்குழுவில் அறிவிக் கப்படலாம். அது சசிகலாவாகவும் இருக்கலாம். அவர் மூலமே தேர்தலை அறிவித்து, மீண்டும் போட்டியின்றி தேர்வாகலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x