Published : 14 Dec 2022 06:55 AM
Last Updated : 14 Dec 2022 06:55 AM
புதுச்சேரி: ஆன்மிக சக்தியின் உறுதியோடு சுதந்திர வேட்கையை உருவாக்கி, இந்தியாவை தலை நிமிரச் செய்தவர் அரவிந்தர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவம் பதித்த நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் இணைய வழியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அரவிந்தரின் உருவம் பதித்த நாணயம், அஞ்சல் தலையை வெளியிட்டார்.
இதில் மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக ஆளுநர் ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரவிந்தர் சொசைட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நம் தேசத்துக்கு புதிய உணர்வை, சக்தியை இதுபோன்ற நிகழ்ச்சிகள் கொடுக்கும். அரவிந்தரின் யோக சக்தி என்பது ஒரு சமூக சக்தி மட்டுமல்ல, அனைவரையும் இணைக்கும் சக்தியாகும்.
அரவிந்தரின் பிறப்பு வங்காளத்தில் இருந்தாலும் கூட அவர் குஜராத்தி, வங்காளம் போன்ற பல மொழிகளை கற்றார். பல மொழிகளை நேசித்தார். அரவிந்தர் குஜராத்திலும், புதுச்சேரியிலும் அதிகநாள் வாழ்ந்தார். சில தினங்களுக்கு முன்பு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் இன்றைய தமிழ் இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை.
அரவிந்தர் ஒரு தனித்துவமிக்க அரசியல் ஞானியாகவும், ஆன்மிக சக்தியாகவும் விளங்கினார். தேசத்தின் விடுதலைக்காக அவர் பாடுபட்டதோடு மட்டுமல்ல; ஆன்மிக சக்தியின் உறுதியோடு சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்தார். அவர் சிறையில் இருந்தபோது, அவரை ஒடுக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. அந்த சக்திகள் அனைத்தையும் முறியடித்தார் அரவிந்தர். இன்றைய பாரத இளைஞர்கள் அவருடைய அந்த சக்தியை உணர்ந்து, சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது: ‘‘உலகுக்கே இந்தியா தலைமை குருவாக விளங்குவதற்கான வழியைக் கூறியவர் அரவிந்தர். அதற்கான வழிதான் புனித யோகமாகும். கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய வழிகளை அவர் புனித யோகமாகக் காட்டியுள்ளார். அதன்படியே பிரதமரும் தொலைநோக்குப் பார்வையுடன், அடுத்த 25 ஆண்டுகள் உலகுக்கே இந்தியா வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்’’ என்றார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேசுகையில், ‘‘அரவிந்தருக்கும், மகாகவி பாரதிக்கும் இடையில் ஆழமான நட்பு இருந்தது. பிரதமரின் ஆட்சியில் அரவிந்தர் கண்ட கனவுகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அரவிந்தர், தொடக்க நிலையில் தாய்மொழி கல்விதான் சிறந்தது என்று சொன்னார். அதைதான் பிரதமர் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தி வருகிறார்.இந்தியா உலகுக்கே இணைப்பு நாடாக இருக்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். ஜி-20 மாநாட்டுக்கு தற்போது இந்தியா தலைமை தாங்குகிறது. அரவிந்தரின் கனவு ஒவ்வொன்றும் நனவாகிக் கொண்டிருக்கிறது” என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘‘புதுச்சேரி ஆன்மிக பூமி. இங்கு, அரவிந்தர் ஆன்மிக குருவாக நிலைத்திருக்கின்றார். நம்முடைய நாடு உலகில் தலைசிறந்த நாடாக விளங்கும் என்று அரவிந்தர் எண்ணிய எண்ணம் இப்போது ஈடேறி வருகிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment