Published : 14 Dec 2022 04:25 AM
Last Updated : 14 Dec 2022 04:25 AM
தஞ்சாவூர்: வங்கிக் கணக்கு விவரம் இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் பட்டியல், அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்தால், அதனுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டுறவு சங்கப் பதிவாளர், கூட்டுறவு சங்க மாவட்ட அதிகாரிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதில், வங்கிக் கணக்கு விவரம் இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் பட்டியல் தயாரித்து, உடனடியாக அந்தந்தக் கடைகளில் வெளியிட வேண்டும். இதில், ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்து, ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுதாரர்கள் இருந்தால், அவர்களது வீடுகளுக்குச் சென்று வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை பெற்று இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாவிட்டால், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வங்கிக் கணக்கு(ஜீரோ பேலன்ஸ்) தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, ரேஷன் கடை பணியாளர்கள், தங்களது கடைக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களில் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாதவர்களின் பெயர் பட்டியலை ரேஷன் கடைகளின் முகப்பில் ஒட்டியுள்ளனர். மேலும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனடியாக வங்கிக்கு சென்று இணைக்குமாறும், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் 2 புகைப்படங்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை வழங்கினால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு தொடங்கப்படும் என்றும் கூறி, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், தமிழகம் முழுவதும் 14,86,000 ரேஷன் கார்டுகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்ற தகவல் அவர்களது செல்போன் எண்களின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காதவர்கள் 45 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல், முகவரி, ரேஷன் கார்டு எண், செல்போன் எண் ஆகியவற்றை ஒவ்வொரு ரேஷன் கடை முகப்பிலும் ஒட்டியுள்ளனர்.
தமிழக அரசின் பணப் பலன்கள் இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வகையில், வங்கிக் கணக்கு விவரங்களுடன் ரேஷன் கார்டு இணைக்கப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக பணம் வழங்கினால், பொதுமக்களிடம் நேரடியாக வழங்காமல், வங்கிக் கணக்கு மூலம் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கணக்கு தொடங்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT