Published : 14 Dec 2022 12:11 AM
Last Updated : 14 Dec 2022 12:11 AM
புதுச்சேரி: ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவம் பதித்த நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளிடும் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் இணைய வழியில் பிரமர் நரேந்திர மோடி பங்கேற்று அரவிந்தரின் உருவம் பதித்த நாணயம், அஞ்சல் தலையை வெளியிட்டார்.
இதில் மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது: ‘‘நமது பாரதத்தை முன்னேற்ற ஆன்மிக, கலாச்சார ரீதியில் அறிவார்ந்த வகையில்
ஆன்மிக குருக்கள் தங்களது வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர். சாதுக்களும், சுதந்திரப்போராட்ட வீரர்களும் போற்றுதலுக்குரியவர்களாவர். அவர்களை வணங்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. அரவிந்தர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அவர் உலகின் மகா குருவாகவும் திகழ்கிறார். அரவிந்தரின் தத்துவம், கொள்கைகள் பாதுகாத்து போற்றத்தக்கவையாக உள்ளன. அரவிந்தரின் போதனைகள் தேசத்துக்கு, தற்போதைய இளைஞர்களுக்கு அவசியமானதாக உள்ளது.’’ என்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது: ‘‘உலகுக்கே இந்தியா தலைமைக்குருவாக விளங்குவதற்கான வழியைக் கூறியவர் அரவிந்தர். அதற்கான வழிதான் புனித யோகமாகும். அதன்படியே கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய வழிகளை அவர் புனிதயோகமாகக் காட்டியுள்ளார். அரவிந்தர் காட்டிய புனித யோகத்தின்படியே நமது பிரதமரும் தொலைநோக்குப் பார்வையுடன் வரும் 25 ஆண்டுகள் உலகத்துக்கே இந்தியா வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் எனும் கருத்தை அடிப்படையாக வைத்தே தியான யோகமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே ஒவ்வொரு இந்தியரும் தியானத்தில் ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்ற வேண்டும். அதற்காக இந்தியர்கள் அனைவரும் நாட்டுக்காக உழைப்பை தந்து செயல்பட வேண்டும்’’ என்று கூறினார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ‘‘அரவிந்தருக்கும், மகாகவி பாரதிக்கும் இடையில் ஆழமான நட்பு இருந்தது. பிரதமரின் ஆட்சியில் அரவிந்தர் கண்ட கனவுகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அரவிந்தர், தொடக்க நிலையில் தாய்மொழி கல்விதான் சிறந்தது என்று சொன்னார். அதைதான் பிரதமர் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா உலகுக்கு இணைப்பு நாடாக இருக்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தங்குகிறது. ஆகவே அரவிந்தரின் கனவு ஒவ்வொன்றும் நனவாகிக் கொண்டிருக்கிறது. அவர் புதுச்சேரியில் ஏற்படுத்திய ஆன்மீக புரட்சி ஆன்மாக்களை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிகாட்டி நடத்திக் கொண்டிருக்கிறது. என்று தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘‘பிரதமர் புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அரவிந்தரின் நாணயம், தபால் தலையை வெளியிட்டுள்ளார். சிறிய மாநிலமான புதுச்சேரி ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியில் அரவிந்தர் தங்கி பெரிய ஆன்மீக குருவாக நிலைத்திருக்கின்றார் என்பது உண்மை. சித்தர்கள், ஞானிகள் வருங்காலம், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணி உரைத்தது அப்படியே நடந்து வருகிறது. அதனடிப்படையில் அரவிந்தர் நம்முடைய நாடு உலகில் தலைசிறந்த நாடாக விளங்கும் என்று எண்ணிய எண்ணம் இப்போது நிறைவேறி வருகிறது. ஆன்மீக பலம் இருந்தால் உலகம் போற்றும். தெய்வத்தின் பலத்தால் மட்டுமே மனிதன் சிறந்து வாழ முடியும். இந்தியா வளர முடியும். அப்படிப்பட்ட ஞான மனிதன்தான் அரவிந்தனார்.’’ இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT