Published : 13 Dec 2022 05:30 PM
Last Updated : 13 Dec 2022 05:30 PM
சென்னை: 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கான தடையும், எலி பேஸ்ட்டுக்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக தற்கொலைத் தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தற்கொலைக்கு காரணமான பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. உயிர்க் கொல்லி மருந்தான எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உட்பொருளை கொண்ட எலி மருந்து மருந்தை நிரந்தரமாக தடுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட பொருள்களின் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் தடை செய்யப்படுகிறது. அந்த மருந்து பொருள்களை வாகனத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 60 நாள் தடைக்கு வேளாண்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதை மேலும் 30 நாள் நீடிக்க விதிகளில் இடம் உள்ளது. மேலும், மத்திய அரசு மூலமே நிரந்தர தடை பெற முடியும். சாணிப் பவுடரில் 'வண்ணக் கலப்பு' இருப்பதால் தொழில்துறை மூலம் அரசாணை பெற வேண்டி உள்ளது. விரைவில் அதற்கான தடை ஆணையும் பிறப்பிக்கப்படும்.
எலிகளை கொல்ல தனியாக மருந்து இருக்கிறது. அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்து கடிதம் எழுதப்படும். தடையை மீறி குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT