Published : 13 Dec 2022 03:28 PM
Last Updated : 13 Dec 2022 03:28 PM
சேலம்: “தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா. அவர் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலாரும் ஓடப் போகிறதா?” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் - ஒழுங்கு நிலை ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகராட்சி அலுவலகம் எதிரில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிற நிலையில், மழையில் நனைந்துகொண்டே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசியது: “திமுக அரசைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் பங்கேற்று இருப்பது மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதை காட்டுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறுகிறது. மக்களிடம் பேசிய ஸ்டாலின், தன் குடும்பத்தில் எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று வாக்குமூலம் அளித்தார். இதேபோல உதயநிதியும், தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றார். நாட்டிற்கு நல்லதை செய்த ஒருவருக்கு முடிசூட்டு விழா. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால், தமிழகத்தில் தேனாறும், பாலாரும் ஓடப் போகிறதா?
தமிழகத்தில் ஏற்கெனவே அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. இவர் வந்தால் ஊழல்களுக்கு தலைவராக இருந்து செயல்படுவார். திமுக தலைவராக கருணாநிதி, அவருக்கு பின் ஸ்டாலின், இப்போது உதயநிதி. இந்தக் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி, மருமகன், மகன் என நான்கு முதல்வர்கள் உள்ளனர். ஒரு முதல்வர் இருந்தாலே தமிழ்நாடு தாக்குப் பிடிக்க முடியாது, நான்கு பேர் இருந்தால் தாக்குப் பிடிக்க முடியுமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். திமுக கட்சி அல்ல, அது கார்ப்பரேட் கம்பெனி.
தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதம் ஆகிவிட்டது. ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு ஆட்சி காலம் முடிந்து விட்டது. தேர்தல் அறிக்கை கூறியபடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படவில்லை. டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக நீட்டிக்கப்படும் என்பதும் நிறைவேற்றப்படவில்லை. இப்படி தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் திமுக அரசு உள்ளது. தேர்தலின்போது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளுக்கு திமுக ஏமாற்றி உள்ளது. தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. இதுதான் திராவிட மாடல்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை அமைத்தோம். அதனை திறந்து வைத்தால் விவசாயிகள் ஏராளமான பயனடைவர். அதை திறக்காமல் வைத்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி அதிகரித்து விட்டது. பொங்கல் தொகுப்பு வழங்க இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீதம் செலவாகும் என்று நிதியமைச்சர் கூறி இருக்கிறார். விலைவாசி அதிகரித்து விட்டதால் செலவு கூடி விட்டதாக நிதியமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்ற முதல்வர் ஸ்டாலினுடைய காரில் மேயர் தொங்கிக்கொண்டு செல்கிறார். அவர் திமுக. ஆனால், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர் காரில் தொங்கிக் கொண்டு செல்வது வேதனையாக இருக்கிறது. ஐஏஎஸ், .ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். அடிமையாக செயல்படக் கூடாது. பிற மாநிலத்தவர் தமிழகத்தை பார்த்தால் தாழ்வாக நினைப்பார்கள்.
அதிமுகவின் மீது பொய் வழக்கு போட்டு முடக்கி விட முடியாது. அதிமுக உடைந்து விட்டது என்று கூறுகின்றனர். உண்மையான அதிமுக நம் பக்கம் இருக்கிறது. நான் மறைந்தாலும் அதிமுக 100 ஆண்டு இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதிமுக வாழையடி வாழையாக தழைத்துக் கொண்டுதான் இருக்கும். மக்கள் பிரச்சினைக்காக செயல்படக்கூடிய ஒரே கட்சி அதிமுக மட்டுமே. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். அதிமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்று எடப்பாடி கே.பழனிச்சாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT