Published : 13 Dec 2022 03:08 PM
Last Updated : 13 Dec 2022 03:08 PM
புதுச்சேரி: “உதயநிதி அமைச்சர் ஆவதுதான் புது மாடல்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேசி தர்ஷன் நிதிக்கொடை திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்க நிகழ்வில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். ‘புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “திராவிட மாடல் தற்போது இங்கு தேவையா? விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தமிழகத்திலிருந்து 300 ஏக்கர் நிலம்தான் தற்போது தேவை, முதலில் இந்நிலத்தை அவர் தரட்டும். புதுச்சேரி மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்நிலத்தை முதலில் அவர் தரட்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் கேட்டுள்ளோம். புதுச்சேரிக்கு தேவையானதை அவர் தரட்டும்.
புதுச்சேரியில் இப்போது ஆட்சியில் அடக்குமுறை இல்லை. நான் ஆட்சிக்கு துணையாக நிற்கும் ஆளுநர். ஆளுநரின் தலையீடு என குற்றம்சாட்டுகிறார்கள். ஆளாளுக்கு தலையீடு இருக்கும் தமிழக அரசை விட ஆளுநரின் தலையீடு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அதிகாரபூர்வமாக ஆட்சிமுறையில் ஆளுநர் பங்கெடுக்க வேண்டும். அண்ணன் ஸ்டாலின் பேசியது சரியில்லை.
ஒற்றுமையாக ஆட்சி இங்கு நடக்கிறது. அத்துடன் பொம்மை ஆட்சி - பொம்மை முதல்வர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அது உண்மைதான். ஆனால் இங்கல்ல - கர்நாடகத்தில்தான். முதல்வர் பொம்மை தலைமையில் கர்நாடகத்தில் ஆட்சி நடக்கிறது. அது புதுச்சேரி என தெரியாமல் அண்ணன் ஸ்டாலின் சொல்லிவிட்டார். அவர் சொல்லும் அளவுக்கு இங்கு ஒன்றுமில்லை. மறுபடியும் கூறுகிறேன், திராவிட மாடல் என்பதற்கு, கலைஞரின் மகனான தமிழக முதல்வர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும்” என கூறினார்.
திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கு காலதாமதம் ஆவதாக முதல்வர் ரங்கசாமி கூறுவதாக எழுப்பிய கேள்விக்கு, “முதல்வர் தெரிவித்த கருத்துக்கு நடைமுறை ஆரம்பமாகிவிட்டது. முந்தைய ஆட்சியில் தீர்வு இல்லை. தீர்வை கண்டறிந்து மத்திய அரசிடம் சொல்லிவிட்டோம். மத்திய அரசால் காலதாமதம் ஆகாது” என கூறினார்.
தமிழக அரசு விமான நிலையம் விரிவாக்கத்துக்கு இடம் தர மறுக்கிறதா என்று கேட்டதற்கு, “தமிழக அரசு இடம் தரவில்லை, அதற்கான தொகை கேட்கிறார்கள், புதுச்சேரியில் ஆட்சி வர முயற்சி செய்வதாக தமிழக முதல்வர் கூறுகிறார், மக்கள் மீது நம்பிக்கை இருந்தால் முதலில் ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு நிலம் தாருங்கள். திராவிட மாடல் ஆட்சி இங்கு தேவையில்லை, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம்தான் தேவை” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, “இதுதான் புது மாடல். 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு மாநிலத் தலைவராக இருந்து உழைத்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை” என்று தமிழிசை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT