Published : 13 Dec 2022 06:19 AM
Last Updated : 13 Dec 2022 06:19 AM
சென்னை: பிரதான வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த சரளா என்பவருக்கும், அவருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வரும் டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையே வாடகை தொடர்பான வழக்கு சென்னையில் உள்ள கீழமை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாக்டர் பார்த்தசாரதி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவு:
கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வாடகைதாரர்கள் வழக்கை நீட்டித்துக்கொண்டே போகலாம். ஆனால், அதற்கு நீதிமன்றங்கள் ஒரு துருப்புச் சீட்டாகிவிட கூடாது. இந்த வழக்கை பொருத்தவரை, 25 ஆண்டுகளாக மனுதாரர் தனது கிளினிக்கை அந்த இடத்தில் நடத்தி வருகிறார். 100 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்ற நில உரிமையாளரின் விருப்பத்துக்கு இடையூறாக மருத்துவர் அந்த இடத்தில் வாடகை கொடுக்காமல் கிளினிக்கை நடத்திக்கொண்டு, வழக்கையும் முடிந்த அளவுக்கு இழுத்தடித்து வருகிறார்.
மனித உயிர்களை காக்கும் மருத்துவர்களின் சேவை உன்னதமானது. அதேநேரம் அந்த மருத்துவர்கள் சமுதாயத்துக்கு நல்ல குடிமகனாகவும் இருக்க வேண்டும்.
இதுபோல பிரதான வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தேவையற்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக நீதிமன்றம் கருதினால், அந்த மனுக்களை முடிந்தவரை விரைவாக தீர்க்க வேண்டும். தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
தனிநபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு கீழமை நீதிமன்றங்கள் முடிவு எடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான காலத்துக்குள் நீதி கிடைக்க வேண்டும்.
வழக்குகள் நீண்டகாலம் இழுத்துக்கொண்டே சென்றால் வழக்காடிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தி விடும். வாடகைதாரர்களின் உரிமைகள் சட்ட ரீதியாக எவ்வாறு பாதுகாக்கப்படுகிறதோ, அதே உரிமைகள் நில உரிமையாளர்களுக்கும் பாதுகாக்கப்பட வேண்டும். இருதரப்பும் வழக்கை இடித்தடிக்கநீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது.
விரைவான நீதி பரிபாலனம்: நவீன தொழில்நுட்பத்தின் உதவியால், முன்னேறிய இந்த உலகில், பொதுமக்களுக்கு எளிதான, விரைவான நீதி பரிபாலன முறை தேவை. தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நீதித் துறை செயல்பட வேண்டும். தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும்.
அன்றாட நடைமுறைகள், மனுக்களை கையாளும் விதம், உடனடிஉத்தரவுகள், தீர்ப்புகளை எளிதாக்குவது போன்றவைதான் நீதித் துறையின் தற்போதைய தேவையாக உள்ளது. மனுதாரரான மருத்துவருக்கும், நில உரிமையாளரான பெண்மணிக்கும் இடையே உள்ள இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்த நீதிபதி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT